குடியேறினார்கள்; மாபெரும் அரசுகளை நிறுவினார்கள்; நல்வாழ்வு நடத்தினார்கள்; தனி நாகரிகம் ஒன்றை வளர்த்துக் கொண்டார்கள்; தம் மொழிவளத்தைப் பெருக்கிக்கொண்டார்கள். அவ்வாறாயின் அவர்கள் தாந்தாம் வாழ்ந்திருந்த இடங்களைத் துறந்து தெற்கு நோக்கிக் குடிபெயரக் காரணம் என்ன? கங்கை வெளியில் அவர்கட்கு நேர்ந்த இடையூறுகள் யாவை? அந்நியர் படையெடுப்பும் நிகழவில்லை. நாடு கடந்து வேற்று நாட்டுக்குச் செல்லுமளவுக்கு மக்கள் தொகையில் பெருக்கமோ, அதனால் வாழ்க்கை நெருக்கடியோ ஏற்பட வழியில்லை. ஆரியவர்த்தத்தின் தெற்கெல்லை விந்தியமலையென மனுதருமம் கூறுகின்றது. எனவே, நாடு கவரும் எண்ணமும் ஆரியர்களுக்கு இருந்திருக்க முடியாது. ஆய்ந்து பார்க்குமளவில், தம் நாகரிகத்தையும், பண்பாடுகளையும், கொள்கைகளையும் அயலாரிடத்தும் பரவச் செய்யவேண்டும் என்னும் நோக்கம் ஒன்றே அவர்களை உந்தியிருக்கவேண்டும் என்று கருத இடமுள்ளது. சென்றவிடமெல்லாம் ஆரியருக்கு உண்டியும், உடையும், உறையுளும் ஆட்சிப் பொறுப்பும் வழங்குவதற்குத் தமிழகத்து மன்னர்களும் உடன்பாடாக நின்றனர். அவர்களுடைய நோக்கம் நிறைவேறுவதற்குப் பல வாய்ப்புகள் அவர்களை எதிர்நோக்கி நின்றன. பௌத்தத் துறவிகளும், சமண முனிவர்களும் தமிழகத்துக்குள் நுழையும்பொழுதே ஆரியரின் குடியேற்றம் பெருமளவில் பரவிவிட்டிருக்க வேண்டும். இத் துறவிகளும், முனிவர்களும் தனித்தனியாகவும், குழுக்களாகவும் தமிழகம் சேர்ந்து தொடக்கத்தில் தவத்தில் ஈடுபட்டிருந்து, பிறகு தத்தம் சமயக் கோட்பாடுகளை மக்களுக்கு ஓதும் தொழிலில் எழுச்சி பெற்றிருப்பார்கள். தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சில மலைக் குகைகளில் கி.மு. 3ஆம், 2ஆம் நூற்றாண்டுப் பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பஞ்சபாண்டவ மலையென்றும், பஞ்சபாண்டவப் படுக்கையென்றும் இக் குகைக்குப் பெயர் வழங்குகின்றது. புத்தருக்குப் ‘பாண்டவப் பாதாளன்’ என்றொரு பெயருமுண்டு. எனவே, இக் குகைள் பௌத்த விகாரைகளாக இருந்தன என்பது தெளிவாகின்றது. பௌத்த சமயமானது கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே குண்டூர் மாவட்டத்தில் நுழைந்து நிலைத்துவிட்டதெனப் பட்டிபுரோலு கல்வெட்டுகள் கூறும் செய்திகள் மூலம் அறிகின்றோம். அசோகர் காலத்திலேயே காஞ்சிமாநகரில் பௌத்தம் நிலைபெற்றுச் சிறப்புடன் விளங்கிற்று. |