பக்கம் எண் :

பண்டைய தமிழரின் அயல்நாட்டுத் தொடர்கள் 69

     மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் கி.மு. மூன்றாம், இரண்டாம்
நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அக் காலத்திலேயே சமண
சமயம் தமிழகத்தில் பரவிவிட்டதற்கு இவை சான்று பகர்கின்றன. வடநாட்டில்
சந்திரகுப்தர் காலத்தில் மிகக் கொடியதொரு பஞ்சம் ஏற்பட்டதாகவும்,
அதனால் பத்திரபாகு என்ற சமண முனிவர் ஒருவர், சமணர் பலர் தம்மைப்
பின்தொடர, தெற்கு நோக்கி வந்து மைசூரில் குடியேறினார் என்றும்
செவிவழிச் சமண வரலாறுகள் கூறுகின்றன. பிறகு விசாகாசாரியார் என்ற
திகம்பர முனிவர் ஒருவரும் அவருடைய மாணவரும் சோழ பாண்டி
நாடுகளில் பல இடங்கட்கும் வந்து சமண சமயத்தைப் பரப்பலானார்கள்.
முதன்முதல் தமிழகத்தை நாடி வந்தவர்களான சமணர்கள் தனித்திருந்து தவம்
புரிவதையே தம் நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களைத்
தொடர்ந்து பிறகு தமிழகத்திற்கு வந்தவர்கள் சமண சமயத்தின் விரிவையே
தம் குறிக்கோளாகக் கொண்டனர். அவர்களுள் தலைசிறந்து விளங்கியவர்
குந்தா-குந்தாசாரியார் என்ற புகழ் பெற்ற சமண முனிவராவர். தமிழகத்தில்
ஆண், பெண் ஆகிய இருபால் துறவிகட்கும் சமணப் பள்ளிகள்
அமைக்கப்பட்டிருந்த செய்திகளைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
கூறுகின்றன. சமண முனிவர்கள் கருநாடகம் முழுவதும் பரவினார்கள்.
அப்பகுதியில் கி.பி. 3ஆம் நூற்றாண்டில் கங்கர்களின் ஆட்சி
தோன்றுமுன்பே சமண சமயம் வேரூன்றிவிட்டது. இஃதன்றிச் சேர நாட்டிலும்,
கடற்கரையோரம் சமணர், பௌத்தர் ஆகிய இரு சமயத் துறவிகளும் தம்
சமயப் பணிகளைத் தொடங்கிவிட்டனர். இவர்கள் தங்கியிருந்த குகைகள் பல
திருவிதாங்கூர்ப் பகுதியில் காணப்படுகின்றன.

     சமணமும் பௌத்தமும் மூண்டெழும் காட்டுத் தீயைப் போலத்
தமிழகத்தில் பரவியதைக் கண்ட பார்ப்பனரும் தம் வைதிக நெறியைத்
தமிழகத்தில் தழைத்தோங்கச் செய்ய வேண்டுமென்று முனைப்புற் றெழுந்தனர்.
தமிழகத்தை நாடி வந்த ஆரியர்களுள் சிலர் தம்மைப் ‘பிருகத்சரணர்’
அதாவது, பெரும் பயணர் என்று கூறிக்கொண்டனர். இன்றும் தமிழகத்துப்
பிராமணருள் பிருகத்சரணர்கள் பெரும்பகுதியினராகக் காணப்படுகின்றனர்.

     தமிழகம் நுழைந்து குடியேறிய ஆரிய மக்கள் காலம், இடம் ஆகிய
சூழ்நிலைகளில் சிக்குண்டு தமிழருடன் திருமணத் தொடர்புகள் கொண்டு
தாமும் தமிழராகவே மாறிவிட்டனர்.