பக்கம் எண் :

சங்க இலக்கியம் 93

பற்றிக் கூறுகின்றார். இராசிகளைப்பற்றிய செய்திகளைப் புறப்பாட்டு
ஒன்றிலும்9 அறிகின்றோம். அதைப் பாடியவர் கூடலூர் கிழார் ஆவர். தமிழ்
இலக்கியத்திலோ வடமொழி இலக்கியத்திலோ கி.பி. 300-க்கு முன்பு
இராசிகள், கோள் நிலைகள் திரிதல். ஒரு குழந்தை பிறக்குங்காலையில் உள்ள
கோள்நிலை ஆகிய இம்மூன்றையும்பற்றி ஒரு குறிப்பேனும்
காணப்படுவதில்லை என்பார் எல்.டி. சுவாமிகண்ணு பிள்ளை யவர்கள்.
எனவே, நெடுநல்வாடையும், கூடலூர்கிழாரின் புறப்பாட்டும் கி.பி. 300-க்கு
முன்பு தோன்றியிருக்க முடியாது என்பது இவருடைய கொள்கையாகும். எஸ்.
வையாபுரி பிள்ளையவர்கள் வேறு காரணங்காட்டி நெடுநல்வாடையின்
பழைமையை மறுப்பார். முல்லைப்பாட்டில் ‘கன்னல்’ என்றொரு சொல்
ஆளப்பட்டுள்ளது.10 அச் சொல் நாழிகை வட்டில் என்று பொருள்படும்.
அகப்பாட்டு ஒன்றன் ஆசிரியர் நல்லந்துவனாரும் நாழிகை வட்டிலைக்
கன்னல் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றார்.11 கன்னல் என்னும் சொல்
‘குரோனிஸ்’ (Khrones) என்ற கிரேக்கச் சொல்லின் மரூஉ என்றும், 3ஆம்
நூற்றாண்டில் ரோமர்கள் கன்னல் என்ற நாழிகை வட்டிலைத் தமிழகத்துக்கு
அறிமுகப்படுத்தினார்கள் என்றும், ஆகவே நெடுநல்வாடையானது கி.பி.
மூன்றாம் நூற்றாண்டில் எழுந்த ஒரு நூலாகும் என்றும் வையாபுரி
பிள்ளையவர்கள் கருதுவார். குரானிஸு க்கும் கன்னலுக்கும் தொடர்பு ஏதும்
இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் கி.பி. முதல் இரண்டு
நூற்றாண்டுகளிலேயே ரோமரின் வாணிகச் செல்வாக்கு உச்சநிலையை
எட்டியிருந்தது. அக் காலத்திலேயே குரோனிஸ் என்ற நாழிகை வட்டிலை
அவர்கள் தமிழ்நாட்டில் வழக்குக்குக் கொண்டுவந்திருக்கக்கூடும். எனவே,
வையாபுரி பிள்ளையவர்களின் கால அறுதியீடு பிழையற்றது என்று
கொள்வதற்கில்லை. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே
நெடுநல்வாடையின் தலைவனாக நச்சினார்க்கினியர் கொள்ளுகின்றார். இப்
பாண்டியன் வாழ்ந்த காலம் சுமார் கி.பி. 90-128. ஆகையால், கி.பி. முதல்
நூற்றாண்டின் இறுதியிலோ, இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ
நெடுநல்வாடை பாடப்பெற்றிருக்க வேண்டும்.

     அடுத்துத் தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்தைச் சிறிது ஆய்வோம்.
இப்போது வழங்கிவரும் தமிழ் இலக்கண

    9. புறம் - 229.    
    10. முல்லைப் - 57-8.
    11. அகம் - 48.