பத்துப்பாட்டுத் தொகுப்பில் இறுதியாகச் சேர்க்கப்பட்டது திருமுருகாற்றுப்படையெனச் சில ஆய்வாளர் கருதுவர். ஏனெனில், இந் நூலில் வடமொழிச் சொல்லாட்சியும், புராணக் கதைகளும் மிகுதியாகக் காணப்படுகின்றன; ஏனைய ஆற்றுப்படைகளில் அவற்றை அவ்வளவு காணமுடியாது. ஆனால், இப் பாடல் முருகன் வழிபாட்டைச் சிறப்பித்துக் கூறுவதென்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். சமயக் கருத்துகளை உள்ளிட்டு இந் நூல் யாக்கப்பட்டதாகும். சமய வழக்கில் ஏற்கெனவே வடமொழிச் சொற்களும் கருத்துகளும் புராண வரலாறுகளும் கலந்துவிட்டன வாகையால் இந்த ஆற்றுப்படையில் அவை மலிந்து காணப்படுவதில் வியப்பேதுமில்லை. தாம் தேடிப்பெற்ற பத்துப்பாட்டு ஏட்டுச் சுவடிகள் பலவற்றுள் திருமுருகாற்றுப்படை சேர்ந்திருக்கவில்லை என்று மகாமகோ பாத்தியாய சாமிநாத ஐயர் தெரிவிக்கின்றார். அதைக்கொண்டு இந்நூல் இத் தொகுப்பில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதோ என்று ஐயுறவிடமுண்டு. ஆனால், வைப்பு முறையில் இவ்வாற்றுப் படையானது பத்துப்பாட்டுத் தொகுப்பில் முதலாவதாகத் திகழ்கின்றது. பிற்சேர்க்கைகள் இறுதியிற்றான் சேரும் ; தலைப்பில் சேரா. பதிற்றுப்பத்தில் முதற்பத்தும் இறுதிப் பத்தும் மறைந்து போயின. இன்னும் அவை கிடைக்கவில்லை. அதைப்போலவே, பத்துப்பாட்டினும், முதற்பாட்டான திருமுருகாற்றுப்படை சில காலம் மறைந்திருக்கக்கூடும். சங்க இலக்கியத்தில் காணப்படாத பல புதிய வடமொழிச் சொற்கள் திருமுருகாற்றுப்படையில் ஆளப் பெற்றுள்ளன. ‘அங்குசம்’6, ‘முகம்’7 என்பன அவற்றுள் சில. கி.பி. 2, 3 நூற்றாண்டுகளிலேயே தமிழில் வடமொழிக் கலப்புப் பெருமளவில் ஏற்பட்டுவிட்டது. எனவே, திருமுருகாற்றுப்படையில் வடசொற்கள் ஆளப்பட்டிருப்பதில் வியப்பேது மில்லை. மேலும், சங்கப் புலவரான நக்கீரரும், திருமுருகாற்றுப்படையின் ஆசிரியரான நக்கீரரும் ஒருவரல்லர் ; இரு வேறு காலத்தவர் ஆவர். திருமுருகாற்றுப்படை ஏனைய பாட்டுகளைவிடக் காலத்தால் பிற்பட்டதாகலாம்; ஆனால், பத்துப்பாட்டுத் தொகுப்பில் பிற்சேர்க்கை அன்று என்று கொள்ளல் வேண்டும். நெடுநல்வாடை ஆசிரியரான நக்கீரர் வானவியல் குறிப்பு ஒன்றைத்8 தம் நூலில் கொடுத்துள்ளார். அதில் மேட இராசியைப் 6. திருமுருகா - 110. 7. திருமுருகா - 92-100. 8. நெடுநல் - 160-2 |