பக்கம் எண் :

சங்க இலக்கியம் 91

     சிறுபாணாற்றுப்படையின் காலத்தைக் கணித்தறிவதற்கு அந்நூலிலேயே
அகச்சான்று ஒன்று கிடைக்கின்றது.5 அந் நூலின் ஆசிரியர் அதில்
கடையேழு வள்ளல்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். இவ் வள்ளல்கள் பரணர்,
கபிலர், முடமோசியார் ஆகிய புலவர்களாலும் வேறு சிலராலும்
பாடப்பட்டவர்கள். ஆகவே, சங்கப் பாடல்கள் பலவற்றுக்கும் காலத்தால்
பிற்பட்டது சிறுபாணாற்றுப்படை எனத் தெரிகின்றது.

     முல்லைப்பாட்டின் காலத்தை யறுதியிட வியலவில்லை. இதற்கும்
நெடுநல்வாடைக்குமிடையே பொது இயல்புகள் சில காணப்படுகின்றன.
ஆகையால், முல்லைப் பாட்டின் ஆசிரியரான காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்
வாணிகனார் மகனார் நப்பூதனாரும் நக்கீரரும் ஏறக்குறைய ஒரே காலத்தவர்
என்று கொள்ளுவதற்கு எதிர்ச் சான்றுகள் இல.

     திருமுருகாற்றுப்படைக்குத் தனிச் சிறப்பு ஒன்று உண்டு; அச் சிறப்பை
ஏனைய ஆற்றுப்படைகளின்பால் காண முடியாது. அஃதென்னவெனின்,
ஏனைய ஆற்றுப்படைகளின் தலைவர் முடியுடை வேந்தரும், குறுநில
மன்னருமாவர். அவர்கள் வழங்கிய பரிசிலும் கொடையும் உலகியற்
செல்வங்கள். அதனால் புலவர்கள் யாரை ஆற்றுப்படுத்துகிறார்களோ
அவர்களுடைய பெயர்களையே அவ் வாற்றுப்படைகள் தலைப்புகளாகத்
தாங்கி வருகின்றன. எடுத்துக்காட்டாகப் பொருநரை ஆற்றுப்படுத்துவது
பொருநராற்றுப் படை; பாணரை யாற்றுப்படுத்துவது பாணாற்றுப் படை;
கூத்தரை யாற்றுப்படுத்துவது கூத்தராற்றுப் படையாகும். ஆனால்,
திருமுருகாற்றுப் படையின் ஆற்றுத்துறை யமைப்பு முற்றிலும் மாறுபடுகின்றது.
உலகியல் அல்லாது வீடுபேற்றை யருளவல்ல வள்ளல் முருகப் பெருமான்
ஒவனேயாவன். அவனுடைய திருவருளைப் பெற்று உயர்ந்தவர் நக்கீரர்.
வீடுபேற்றைக் கருதித் தம்மையணையும் சான்றோரை விளித்து வீடுபேறு
அளிக்கவல்லான் முருகன் ஒருவனே என்று எடுத்துக் கூறித் தாம் பெற்ற
இன்பமான முருகனின் திருவருட் செல்வத்தை அவர்களும் பெற்றுப் பேரின்ப
வாழ்வை யடையுமாறு நக்கீரர் அவரை யாற்றுப்படுத்துகின்றவாறு
அமைந்துள்ளது திருமுருகாற்றுப்படை. ஆற்றுப் படைக்குப் புகலிடமாக
நிற்பவன் முருகன் என்ற முறையில் இவ்வாற்றுப் படைக்குத்
திருமுருகாற்றுப்படை எனப் பெயர் அமையலாயிற்று.

     5. சிறுபாண், 84-111.