பக்கம் எண் :

90தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

அவர்களை வழிப்படுத்துதலே ஆற்றுப்படை என்னும் செய்யுள் வகையாகும்.
பத்துப்பாட்டில் மட்டுமின்றிப் பதிற்றுப்பத்து, புறநானூறு, புறப்பொருள்
வெண்பாமாலை1 ஆகியவற்றிலும் ஆற்றுப்படைகள் காணப்படுகின்றன.

     பத்துப்பாட்டுப் புலவர்கள் சிலரும், அவர்களால் பாடப்பட்டோர்
சிலரும் எட்டுத்தொகை பாடிய புலவர்கள் சிலருடனும், அவர்களால்
பாடப்பட்டோர் சிலருடனும் உடன் காலத்தவராக விளங்குகின்றனர்.
இவ்வுண்மையை வைத்துக்கொண்டு பத்துப் பாட்டுப் பாடல்கள் இயற்றப்பட்ட
காலங்களை ஒருவாறு கணித்தறியக்கூடும். நெடுநல்வாடையின் ஆசிரியரான
நக்கீரர் அகநானூற்றுப் பாடல் ஒன்றில்2 கரிகால் வளவனைக்
குறிப்பிடுகின்றார். இச் சோழ மன்னனே பெரும்பாணாற்றுப்படையின்
பாட்டுடைத் தலைவனாகக் காட்சியளிக்கின்றான். நக்கீரர் கரிகாலன்
காலத்தவர் என்பதற்குத் தக்க சான்றுகள் கிடைத்தில வாகையால் அவரை
அம் மன்னனுக்குச் சற்றுப் பிற்பட்டு வாழ்ந்தவர் என்று கொள்ளத்தகும்.
நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
இவனும் நக்கீரரும் உடன் காலத்தவர்கள். இருவருமே கரிகாற் சோழனுக்குக்
காலத்தாற் பிற்பட்டவர்கள் ஆவார்கள். எனவே, திருமுருகாற்றுப்படையும்,
நெடுநல்வாடையும், பெரும்பாணாற்றுப்படையும் ஏறக்குறைய ஒரே காலத்தில்
இயற்றப்பட்டவை எனக்கொள்ளுவர்.

     நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவனான தலையாலங்கானத்துச்
செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே மதுரைக் காஞ்சிக்கும் பாட்டுடைத்
தலைவனாகக் காட்சியளிக்கின்றான். மலைபடுகாடத்தின் தலைவனான நன்னன்
மகன் நன்னன் பெயர் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்படுகின்றது.3 எனவே,
இம் மூன்று பாடல்களும் ஏறக்குறைய ஒரே கால அளவில் இயற்றப்பட்டன
 என்று கொள்ளுதல் பொருத்தமாகும். அகநானூற்றுப் பாட்டு ஒன்றில்4
அதன் ஆசிரியரான நக்கீரர் கபிலரைப் பற்றிய செய்தி ஒன்றைத் தருகின்றார்.
அதைக்கொண்டு நெடுநல்வாடைக்கும் மதுரைக் காஞ்சிக்கும் முற்பட்டது
குறிஞ்சிப் பாட்டு என்று ஊகித்தறியலாம்.

     1. பு. பொ. வெ. மாலை - 216-219.
     2. அகம்- 141.
     3. மதுரைக் - 618.
     4. அகம்-78.