பக்கம் எண் :

சங்க இலக்கியம் 89

நல்லந்துவனார் ஒருவரே என்னும் கொள்கையே பலர் கருத்தையும் கவர்ந்து
வருவதாக தெரிகின்றது.

     பரிபாடலைத் தொகுத்தவர்கள் பெயரும் தொகுப்பித்தவர்கள் பெயரும்
இன்று மறைந்துவிட்டன; அவற்றை அறிய முடியவில்லை. சங்க நூல்கள்
ஏனையவற்றைவிடப் பரிபாடலில் வடமொழிச் சொற்கள் மிகுதியாகக்
கலந்திருப்பதாலும், ஆரிய புராணக் கதைகள் சேர்ந்திருப்பதாலும் அது
கடைச்சங்க காலத்தின் இறுதி யாண்டுகளில் தோன்றியிருக்கவேண்டு மென்பர்
ஒருசாரார். ஒரு நூல் எடுத்துக்கூறும் செய்திக்கு ஏற்ப அந்நூலின்
சொற்கட்டும் சொல்லாட்சியும் அமையும்; சமய, தத்துவ நூல்களில் வடமொழிக்
கலப்பு மிகுந்திருக்கும். பரிபாடல் பெரிதும் சமயத் தொடர்புடையது. அது
புராணக்கதைகள் பலவற்றை எடுத்தாள்கின்றது. ஆகவே, அதில் வடமொழிச்
சொற்களும் புராணக் கதைகளும் சற்றே கூடுதலாகக் கலந்திருப்பதில்
வியப்பேதுமில்லை. எனவே, பரிபாடலைக் காலத்தால் பிறப்பட்டது எனக்
கூறமுடியாது. மேலும், மேலும், பரிபாடலில் ஆசிரியர் நல்லந்துவனாரின்
பாடல்கள் நான்கு இடம் பெற்றுள்ளன. இவையேயன்றி இவருடைய
பாடல்களுள் 33 கலித்தொகையிலும், ஒன்று அகநானூற்றிலும் (43), ஒன்று
நற்றிணையிலும் (88) சேர்க்கப்பட்டுள்ளன. தொகை நூல்கள் எட்டினுள் இப்
புலவர் ஒருவருடைய பாடல்கள்தாம் நான்கில் இடம் பெற்றுள்ளன. அஃது
இவர்க்குற்ற தனிச் சிறப்பாகும். எனவே, இக் காரணத்தைக் கொண்டும்
பரிபாடலானது பிற சங்க இலக்கியங்கட்குக் காலத்தால் பிற்பட்டதென்னும்
கொள்கையை எளிதில் மறுக்கலாகும்.

     பத்துப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள நூல்களும், எட்டுத்தொகை
நூல்களின் பாடல்கள் இயற்றப்பட்ட காலத்திலேயே எழுந்தவையே என்று
வழிவழியாகவும், அகச் சான்றுகளைக் கொண்டும் அறிஞர்கள்
கருதுகின்றார்கள். பத்துப்பாட்டில் வரும் மன்னர்களையும் புலவர்களையும்
எட்டுத்தொகையிலும் காண்கின்றோம். ஆனால்: இத் தொகையில் சேர்ந்துள்ள
பத்துப் பாடல்களும் ஒரே காலத்தில் இயற்றப்பட்டனவல்ல. ஒன்றுக்கும்
மற்றொன்றுக்குமிடையே கால வேறுபாடு உண்டு. இவற்றுள் ஆற்றுப்படைத்
துறையில் பாடப்பெற்றவை ஐந்து. பாணர், கூத்தர், பொருநர், விறலியர்
ஆகியவர்கள் மன்னன் அல்லது வள்ளல் ஒருவனிடம் தாம் பெற்ற பரிசிலைத்
தம்மை எதிர்நோக்கி வந்த இரவலர்க்கு எடுத்துக்கூறி, அவர்களும்
அம்மன்னன் அல்லது வள்ளல்பால் சென்று பசிரில் பெற்றுய்யுமாறு