பக்கம் எண் :

88தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

இருவரைப்பற்றியும் ஒரு குறிப்பேனும் இந்நூலில் இல்லை. வையை யாறு,
கூடல் நகரம் ஆகியவற்றைத் தவிர்த்து வேறு ஓர் ஆற்றின் பெயரோ,
நகரத்தின் பெயரோ கலித்தொகையில் காணவில்லை. மற்றும் பிற சங்க
இலக்கியங்களில் தொகுக்கப்பட்டுள்ள அகத்துறைப் பாடல்களில்
குறிப்பிடப்பெறும் புலவர்கள், மன்னர்கள், வள்ளல்கள் ஆகியவர்களின்
பெயர்கள் கலித்தொகையில் ஒரு பாட்டிலேனும் பயின்று வருவதில்லை.

     மேலே காட்டிய சான்றுகளும் கலித்தொகையானது, சங்க காலத்துக்குப்
பிற்பட்டு எழுந்த இலக்கியமாகும் என்னும் கருத்தை உறுதிப்படுத்துகின்றன.
தமிழகம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு
வரையில் களப்பிரர் விளைத்த குழப்பங்களாலும், பல்லவர்
படையெடுப்புகளாலும் அல்லற்பட்டு நின்றது. சோழரும் பாண்டியரும் தம்
வலியிழந்து, ஆட்சி குன்றி மறைந்து கிடந்தனர். களப்பிரரும் பல்லவரும்
வடமொழியையும், ஆரியக் கொள்கைகளையும், சமண சமயத்தையும் பெரிதும்
பரப்பி வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து நாயன்மார்களும்,
ஆழ்வார்களும் தத்தம் சமய தத்துவங்களை விளக்கிப் பாடல்களைப் பாடிப்
புராணக் கதைகளையும், மதக் கோட்பாடுகளையும், எடுத்துப் போதித்து
வந்தனர். இந் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் நுழைந்துவிட்ட கருத்துகள்,
சொற்கள், மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றைக்
கலித்தொகையில் பார்க்கலாம். சைவ சமய வளர்ச்சியும், சமண பௌத்த சமய
வளர்ச்சியும் ஒன்றோடொன்று போட்டியிட்டு மக்களின் கருத்தைச் சமயத்
துறையில் ஈர்த்துக்கொண்டிருந்த ஒரு காலத்தில் கலித்தொகை போன்ற
முற்றிலும் தொகை நூலான இலக்கியம் ஒன்று வெளிவந்திருக்க முடியாது.
எனவே, களப்பிரர் ஆட்சி தொடங்குவதற்கு முன், கி.பி. 2ஆம் நூற்றாண்டு
முதல் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற் கிடையிட்டதொரு காலத்தில் இந்நூல்
இயற்றப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் உடம்பட்டு
வருகின்றனர்.

     கலித்தொகை ஆக்கப்பட்ட காலத்தைப் போலவே அதனை ஆக்கியவர்
அன்றி ஆக்கியவர்கள் யார் என்பதைப்பற்றியும் ஆய்வாளரிடையே கருத்து
வேறுபாடு நிகழ்ந்து வருகின்றது. இந் நூல் முழுவதையும் ஒரு புலவரே
பாடினார் என்பர் சிலர்; சிலர் ஒரு கலியை ஒரு புலவராகப் புலவர்கள் ஐவர்
கலித்தொகையைப் பாடினர் என்பர். எனினும், இந் நூலின் ஆசிரியர்