பால் நினைந்தூட்டி வளர்த்த பசுங்கிளியின் பசியையும் மறந்து, தலைவி நீராடத் தலைப்பட்டாள் என்று கவிஞர் கூறுமாற்றால், மாண்பமைந்த மலர்ப் பொய்கையின் பெருமை இனிது விளங்குவதாகும். அத் தலைவி, தண்ணளியோடு பாலூட்டும் தாய் ஆதலால், மதி நலம் வாய்ந்த கிளி அவள் மனத்தைத் துன்புறுத்தாது தன் பசியைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழியை நாடிற்று. மலர் நிறைந்த பொய்கையில் மீன் முதலாய உயிர்களும் அன்னம் முதலாய பறவைகளும் நிறைந்திருப்பினும், மங்கைக்குப் பாம்பினிடத்துள்ள பயம் மிகப் பெரிதெனக் கருதிய கிளியின் மதி நலம் அறிந்து மகிழத்தக்கதாகும். இவ்வாறு செவ்வியறிந்து பேசுதற்குரிய முறையில் அக் கிளியைப் பயிற்றியிருந்த மங்கையின் மதி நலமும் நன்கு விளங்குகின்றது. ஆகவே, குளிர்ந்த நீர் நிறைந்த பொய்கையின் பெருமையும் அந் நீரில் மகிழ்ந்து விளையாடிய மங்கையின் மதிநலமும் சிந்தாமணிக் கவிஞரால் சிறப்பாக உணர்த்தப்பட்டன. மங்கை, அஞ்சி ஓடிக் கரையேறியபொழுது அவள் காதிலணிந்திருந்த தோடுகளில் ஒன்று கழன்று தண்ணீரில் விழுந்துவிட்டது. தோடிழந்த பாவை துடித்தாள்; கண்ணீர் வடித்தாள். ‘ஐயோ! நான் என்ன? செய்வேன்? ‘பொய்கைக்குப் போக வேண்டா’ என்று அன்னை தடுத்தாளே! அவள் தடையை மீறி வந்தேனே! வெறுங்காதுடன் வீட்டிற்குச் சென்றால் அன்னை சீறுவாளே! திட்டிக் கொட்டுவாளே! இப்பொய்கையில் இறங்கித் தேடித் தருவார் யாரையும் காணேனே! என் கண்ணனைய தோழியரும் கைவிட்டுச் சென்றார்களே! அதோ! ஒரு மெல்லியல் அன்னம் கரையருகே நீந்தி வருகின்றது. இன்னல் உற்ற என் நிலையைக் கண்டு இரக்கமுற்றுத்தான் வருகின்றது போலும்!’ |