பக்கம் எண் :

104தமிழ் இன்பம்

என்றெண்ணிப்     பேசலுற்றாள்   மெல்லியல்;  ‘அன்னமே!  உன்னை
வணங்குகின்றேன்.  எனக்கு  நீ   ஒரு   நன்மை  செய்ய வேண்டும். நீ
வாழும்  பொய்கையில்   என்  காதணி கழன்று விழுந்துவிட்டது. அதை
நினைத்தால்  என்  நெஞ்சம்  நடுங்குகின்றது. என் தாய் பொல்லாதவள்!
நீதான்   என்னைக்   காப்பாற்ற  வேண்டும்;   போக்கடித்த   நகையை
எடுத்துத் தரவேண்டும்’ என்று கைகூப்பித் தொழுதாள்.

“மின்னொப் புடைய பைம்பூண்
   நீருள் வீழக் காணாள்

அன்னப் பெடையே தொழுதேன்

   அன்னை கொடியள் கண்டார்

என்னை அடிமை வேண்டின்

   நாடித் தாஎன் றிறைஞ்சிப்

பொன்னங் கொம்பின் நின்றாள்

   பொலிவின் வண்ணம் காண்மின்”

என்பது சிந்தாமணி.

பொய்கையிலே     காதணியைப்  போக்கடித்த  மங்கை. ஒரு பெண்
அன்னத்தை   நோக்கித்   தன்   குறையை    முறையிட்டாள்   என்று
பொருத்தமாகக்   கூறினார்   கவிஞர்.  ‘பெண்ணுக்குப்  பெண்மைதான்
இரங்கும்’  என்று  எண்ணி,  அன்னப் பெடையே!’ என்று அழைத்தாள்;
அதன்   கருணையைப்   பெறுவதற்காகக்    கைகூப்பித்   தொழுதாள்;
மேலும்,   அதன்    உள்ளத்திலெழுந்த    இரக்கத்தைப்    பெருக்கும்
பொருட்டு,  ‘அன்னை  கொடியவள்’  என்று  அறிவித்தாள்;  காலத்திற்
செய்யும்  உதவிக்கு   என்றென்றும்   கடமைப்பட்டவள்  என்று   தன்
நன்றியறிதலைப்    புலப்படுத்தினாள்    என்பது    கவிஞர்   கருத்து.
இத்தகைய  நயங்களெல்லாம்  சிந்தாமணிச் சொல்லோவியங்களிற் சிறந்து
விளங்கக் காணலாம்.