பக்கம் எண் :

116தமிழ் இன்பம்

“தோயும் திரைகள் அலைப்பத்
   தோடார் கமலப் பள்ளி

மேய வகையில் துஞ்சும்

   வெள்ளை யன்னம் காணாய்”

என்று     தான்  பெற்ற  இன்பத்தை  இனிது  எடுத்துரைத்தான்.  அப்
பொய்கையில்  இலங்கிய   அழகிய  மலர்கள் முகமலர்ந்து இருவரையும்
அழைப்பனபோல்    அசைந்தன.    அவ்    வாவியின்    தன்மையும்
செம்மையும் கண்ட இருவரும், தாய்  முகம்  கண்ட  சேய் போல் மனம்
களித்து  அந்  நன்னீரைப்  பருகி   மகிழ்ந்தார்கள். அருந்  தாகத்தால்
வருந்திய   இருவருக்கும்  தண்ணீரை எடுத்து வழங்கும் தன்மை போல்
அடுக்கடுக்காக   அலைகள்    கரையருகே  வந்து   சேர்ந்தன.  தாகம்
தணிந்து,    மனமும்   மெய்யும்    குளிர்ந்த    பின்னர்,   இருவரும்
அக்குளத்தின்    ஈரக்   கரையில்    இனிதமர்ந்து,    அங்கு   வீசிய
இளங்காற்றை  நுகர்ந்து  இன்புற்றார்கள்;  அப்போது  அவ்  வாவியின்
அருகே  கொத்துக்  கொத்தாகப்  பொன்நிறக் கனிகளைத் தாங்கி, குளிர்
நிழல்  விரித்து  நின்ற  மரமொன்றைக்  கண்டார்கள்.  அதன் நிழலிலே
தங்கி இளைப்பாற எண்ணி, இருவரும் அங்குச் சென்றார்கள்.

கதிரவன்     வெம்மையைத்  தடுப்பதற்கு  ஓங்கிய பாசிலைப் பந்தர்
வேய்ந்தாற் போன்று விளங்கிய  மரத்தின்  நிழலில் இருவரும்  அயர்ந்த
உறக்கத்தில்  ஆழ்ந்தார்கள்.  சில  நாழிகை  சென்ற  பின்னர், தோழன்
துயிலொழிந்து   எழுந்தான்;  எங்கும்   பசுமை   நிறமும்,  பறவையின்
ஒலியும்,    பழத்தின்     மணமும்     நிறைந்திருப்பினும்,    பசியின்
கொடுமையைப் பொறுக்கலாற்றாது வருந்தினான். கற்பகத் தருவெனக்