பக்கம் எண் :

கற்பனை இன்பம்117

கவின்பெற     விளங்கிய  மரக்  கொம்புகளை  நயந்து  நோக்கினான்;
அவற்றில்    பொன்னிறமான     பழங்கள்     கொத்துக்   கொத்தாய்
எம்மருங்கும்    இலங்கக்     கண்டான்;    அப்பொழுதே   அம்மரக்
கிளைகளின்  வழியாக  மேலே  சென்று,  இருவரது  அரும் பசியையும்
தீர்ப்பதற்குப்  போதிய   கனிகளைக்  கொய்து   வந்து,  துணைவனைத்
துயிலினின்றும்   எழுப்பினான்.  கனிகளின்   நிறத்தைக்  கண்டும்  நன்
மணத்தை    நுகர்ந்தும்,     தீஞ்சுவையைத்    துய்த்தும்    இருவரும்
இன்புற்றார்கள்.   பின்னும்  சிறிதுபொழுது  அம்   மரத்தின்   நிழலில்
அமர்ந்திருக்கையில்,   அரசகுமாரனது    தலை    நோய்   மிகுந்தது.
அதனைத்  தீர்க்கும்   வகையறியாது   தோழன்  திகைத்து, ‘எவரேனும்
இவ் வழி வாராரோ’ என்று எதிர் நோக்கி இருந்தான்.

இவ்வாறு     இருக்கையில் அவ்விடத்தை  நோக்கி  ஒரு முதியவன்
வந்து   சேர்ந்தான்.   “தலைக்  குத்துத்  தீர்க்கும்  மருந்து தங்களிடம்
உண்டோ?”  என்று  தோழன்   அவனை   வினவினான். அப்பொழுது
முதியோன்  புன்னகை பூத்து, “கையில்  வெண்ணெயிருக்க  நெய்  தேடி
அலையும்   வெள்ளியரும்  உண்டென்பதை இன்று நேராக அறிந்தேன்;
இம் மரத்தின் பட்டையில் சிறிது செதுக்கி,  அதன்  சாற்றைத்  தலையிற்
பிழிந்தால் எவ்வகைத்  தலைக்குத்தும்  தீர்ந்து விடுமே” என்று சொல்லி
அப்பாற்    சென்றான்.    அதை    அறிந்த    தோழன்   அளவிலா
மகிழ்வடைந்து,  அம்  மரப்  பட்டையின்  சாற்றை மன்னன் மைந்தனது
தலையிற்   பிழிந்தான்;   சிறிது    நேரத்தில்    அரசிளங்   குமரனது
தலைக்குத்து அறவே ஒழிந்தது.