பக்கம் எண் :

118தமிழ் இன்பம்

அந்   நிலையில், தோழன் தலைநோய் தீர்ந்த இளவரசனை நோக்கி,
“ஐயனே!  நாம்  இருவரும்   கானகம்  சென்றது   முதல் இதுவரையும்
நிகழ்ந்த  செயல்களைப்  பார்த்தாயா?   நாம்  பசியாலும்  வெயிலாலும்
நலிந்து,  மெய்  தளர்ந்து, வருந்தும் நிலையில்  இப்  பொய்கை நம்மை
அன்புடன்  அழைத்து  இன்முகம்  காட்டித்  தாகம் தணித்துத் தளர்வை
மாற்றியது.  அப்  பால்,  இம்  மரம்  நாம்  தங்கியிருக்கக்  குளிர்நிழல்
தந்து,  பசியாறப்  பழங்கள்   அளித்துத்  தலைநோய்  தீர்க்கவும்  தனி
மருந்தாய்   அமைந்தது.  இத்   தன்மையை   நோக்குங்கால்,  நல்லார்
கைப்பட்ட    செல்வத்தின்     தன்மை    நன்கு    விளங்குமன்றோ?
வறுமையால்  வருந்தி  வந்தவரை  இனிய  முகத்தோடு  ஏற்று, அவரது
குறையை  நிறை   செய்வதே  அறிவுடைய செல்வர் செயலாகும். ஆற்று
வழியாகவும்    ஊற்று    வழியாகவும்    நன்னீரைத்    தன் அகத்தே
நிரப்பிக்கொள்ளும் இப் பொய்கைபோல்,  அறிவுடையார்,  நல்வழிகளால்
ஈட்டிய  பொரும் பொருள்  நிறைந்த  பொய்கை எப்பொழுதும் தண்மை
வாய்ந்து  விளங்குதல்போல,  அறிவுடைய   செல்வரும்  ஈரம்  வாய்ந்த
நெஞ்சினராய்  இலங்குவார்கள்.  தாகத்தால்   வருந்தி   வருவோர்க்குத்
தடையின்றி நீர் வழங்கும்  தடாகம்  போல், கல்வியும் செல்வமும் பூத்த
மேலோர்  வறிஞர்க்கு  வரையாது  பொருள்  வழங்கும்  வள்ளல்களாய்
விளங்குவார்கள்.  இன்னும்,   தமக்கென  வாழாது   பிறர்க்குரியாளராய்
வாழும்  பெரியார்பால்   அமைந்த   செல்வம்,  ஊருணியின் நீர்போல
ஊரார்க்கே முழுவதும் பயன்படுவதாகும். இதனாலேயே,

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு”