பக்கம் எண் :

கற்பனை இன்பம்121

இத்     தகைய   செல்வம்   நிறைந்த   பேதையர்.   நிலத்துக்குச்
சுமையாகவும்,   உலகத்திற்கு   உற்ற  வசையாகவும் அமைந்திருத்தலால்
அன்னார்   அழிந்து    ஒழிவதே   நாட்டுக்கு  நன்மை  பயப்பதாகும்.
அறிவுடைய செல்வரை உலகம் போற்றும்;  அறிவற்ற  செல்வரை உலகம்
தூற்றும்.  அறிவுடைய   செல்வனது  ஆக்கம்  கண்டு உலகம் களிக்கும்;
அறிவிலாச் செல்வனது அழிவைக் கண்டு  உலகம்  மகிழும். அறிவுடைய
செல்வன்  தன்  பொருளைத்   தக்கவாறு   பயன்படுத்தி,   இம்மையிற்
புகழும்,  மறுமையில்   இன்பமும்   எய்துவான்.   அறிவிலாச் செல்வன்
பயன்பட  வாழும்  பண்பறியாப்   பேதையனாய்   இம்மையிற்  பழியும்
மறுமையில் துன்பமும் எய்துவான்.

“நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்ட திரு”

என்பது என்றும் பொய்யா மொழியேயாகும்.