19, சிவனடியார் முழக்கம்* காலைப் பொழுது; தேர் ஓடும் திருவீதியில் பெருமுழக்கம்: “திருத்தொண்டர் சங்கம் - வாழ்க! வாழ்க!” “சிவனடியார் திருக்கூட்டம் - வெல்க! வெல்க!” “பசியின் கொடுமை- வீழ்க! வீழ்க!” என்று இரைந்து கொண்டு சென்றது ஒரு திருக்கூட்டம். இடையிடையே ‘பம் பம்’ என்று ஆயிரம் சங்குகள் சேர்ந்து ஒலித்தன. அத் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் பல்லாயிரவர்; அவர்கள் கையிலே திருவோடு; மெய்யிலே திருநீறு; கழுத்திலே தாழ்வடம்; இடுப்பிலே கந்தைத் துணி; அப் பண்டாரப் படையைப் பார்ப்பதற்கு ஊரெல்லாம் திரண்டு எழுந்தது. ஊருக்கு மேற்கே ஒரு பூந்தோட்டம்; அங்கே போய்ச் சேர்ந்தது திருக்கூட்டம். தலைவர் சுந்தரமூர்த்தி எழுந்து நின்றார். தொண்டார்கள் கைதட்டி ஆரவாரித்தனர். தலைவர் தலைவணங்கிப் பேசலுற்றார்; “தோழர்களே! திருத்தொண்டர்களே! நெடுங்காலமாக நமது சங்கம் உறங்கிக் கிடந்தது. ஆயினும் இன்று விழித்துக்கொண்டோம்; ஒற்றுமைப் பட்டோம். திருத்தொண்டர் படை திரண்டு எழுந்துவிட்டது. இதைத் தடுக்க வல்லவர் இவ்வுலகில் உண்டோ? (ஒரு குரல்; ‘இல்லை; இல்லை’. பலத்த ஆரவாரம்). ‘தொண்டர்
* ஆனந்த விகடன், 1946 தீபாவளி மலரில் எழுதியது. |