என்று ஆரம்பித்தவுடன் பந்தலிலே பேச்சு அடங்கிற்று. எல்லோரும் ஒருமுகமாய்ப் பாட்டைக் கேட்டார்கள். அவ்வூரில் உள்ள மாஞ்சோலையில் மந்திகள் கிளைக்குக் கிளை தாவித் தலைகீழாக ஆடும் அழகைக் கண்டு கவிராயர் ஒரு பாட்டுக் கட்டிவிட்டாரே என்று பாட்டிகள் பாராட்டினார்கள். பந்தலுக்கு வெளியே கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பாட்டைக் கேட்டவுடனே ஒரு லாகை போட்டுக் கவிராயர் வாக்கை மெய்ப்பித்தார்கள். மற்றொரு நாள் சமரபுரி முதலியார் வீட்டில் ஓர் அமரகிரியை நடந்தது. அதைக் கேள்விப்பட்ட கவிராயர் கருமாந்திரக் கூட்டத்திற் புகுந்து, “அமரர்கள் கண்ணீர் சிந்த அந்தரர் பொருமி யேங்கத் தமரெலாம் தவித்து வாடத் தங்கையர் தளர்ந்து சோர” என்று உருக்கமாய் எடுத்த பாட்டு முடியுன்னே அங்கிருந்த மங்கையர் ஓவென்று அலறி அழத் தொடங்கினார்கள். பாட்டு, அழுகையால், அரை குறையாய் முடிந்தது. பாட்டைக் கேட்டு உருகிய சமரபுரி முதலியார் கவிராயருக்கு வெள்ளிப் பாக்குவெட்டி யொன்று பரிசளித்தார். இவ்வாறு நன்மை தீமைகள் நேராத காலங்களிலும் கவிராயர் சீமான்கள்மீது சித்திரக்கவி செய்வார்; சில பேர்வழிகளை நாக பந்தத்தில் அடைப்பார்; மற்றும் சில பேரைக் கமல பந்தத்தில் கட்டுவார்; பந்தங்கள் தயாரானதும் வெள்ளித்தடி பிடித்து அவர்கள் வீட்டை நோக்கிச் செல்வார். ஒரு நாள், கவிராயர், |