அன்னப் பாட்டுப் பாடிய புகழ் பெற்ற பொன்னப்பக் கவிராயர் அன்று முதல் ஆயிரம் ஆயிரமாகப் பாடித் தள்ளினார். அவரது கவியின் பெருக்கத்தைக் கண்டவர்கள், கம்பருக்கும் காளிதாசருக்கும் அருள் செய்த காளியே அவருடைய நாவிலும் சூலத்தால் எழுதிவிட்டாள் என்று வெளிப்படையாகப் பேசினார்கள். அவர் வாக்குப் பலிக்கும் என்று நம்பித் தோணிபுரி வாசிகள் அவருக்கு வேண்டிய பொருள் கொடுத்தார்கள். பணக்காரர் வீட்டில் கல்யாணம் நடந்தால், பொன்னப்பக் கவிராயர், பட்டைத் தார்போட்டு, நெற்றியிலே திருநீற்றைப் பட்டையாக இட்டு, வெள்ளிப் பூண் பிடித்த தடிக்கொம்பைக் கையிலே பிடித்துக் கம்பீரமாக நடந்து செல்வார். கல்யாணப் பந்தலிலுள்ள மிராசுதார்கள் மரியாதையாக விலகிச் சபையின் நடுவே கவிராயருக்கு இடங் கொடுப்பார்கள். மணச்சடங்கு முடிந்தவுடனே கவிராயர் நளினமாக வெள்ளி டப்பியிலிருந்து பொடி யெடுத்து நாசியில் இழுத்துக்கொண்டு உச்சத் தொனியில் தம் வாழ்த்துப் பாட்டை எடுத்து விடுவார். ஒரு நாள், நந்திபுரிச் சுந்தர முதலியார் வீட்டில் விமரிசையாக நடந்த கல்யாணத்திற்குக் கவிராயர் போயிருந்தார். மணமக்கள் மணவறையைச் சுற்றி வந்து உட்கார்ந்ததும், கவிராயர் “மந்திகள் லாகை போடும்” என்று ஓர் எடுப்பு எடுத்தார். “மந்திகள் லாகை போடும் நந்தியம் புரியிலே வாழும்” |