தாம் இயற்றி அச்சிட்டிருந்த நாகபந்தம், கமலபந்தம் முதலிய பந்தங்களையும், சரமகவி, சீட்டுக்கவி முதலிய பாட்டுகளையும் கோடையிடியிடம் காட்டினார். சரம கவிச் சிங்கத்தின் கர்ச்சனை கோடையிடியின் முழக்கத்திலும் அதிகமாகவே இருந்தது. கோடையிடி; - தோணிபுரித் தோன்றலே! நாகபந்த நாயகமே! அடியேன் குடிசை தங்கள் வருகையால் புனிதமடைந்தது. எளியேன் தங்களுக்கு என்ன செய்யக்கூடும்? தங்கள் சித்தம் என் பாக்கியம். கவிராயர்: “கோடை யிடிமுழக்கும் கோனேரி யப்பாகேள் மாட மதிதவழும் மதுரைமாப் புலவரிடம் நாடறியப் பட்டம் நயந்துபெற வேணுமென்றே காடும் கரையும் கடந்திங்கு வந்தேன்காண்” கோடையிடி : - கல்விக் களஞ்சியமே! கவிச் சிங்கமே! மூச்சுவிடு முன்பே முப்பது கவி பாடும் உங்களுக்கு நாங்களா பட்டமளிக்கும் தரமுடையோம்? நீங்கள் இருப்பது மலையின் முடி; நாங்கள் கிடப்பது மடுவின் அடி. மதுரையின் பெருமை யெல்லாம் பழங்கதையாய்ப் போயிற்று. கவிப்பெருஞ் சிங்கமாய்த் திருப்பதி முதல் கன்னியாகுமரிவரை திக்கு விஜயம் செய்துள்ள தங்கள் பெருமையை அறிய வல்லார் இங்கு எவரும் இல்லை. கவிச்சக்கரவர்த்திப் பட்டம் பெற்ற ஒட்டக்கூத்தர் குலத்திற் பிறந்தவர் ஒருவர் காஞ்சி மாநகரில் இருக்கிறார். ‘அடுக்கு மொழி ஆனந்தக் கூத்தர்’ என்று அவரை அறிந்தோர் அழைக்கிறார்கள். அவர் கொடுக்கும் பட்டம் இப்பொழுது எல்லோராலும் |