அன்புடன் அளித்த அதிகமானது வள்ளன்மையும் ஒருங்கே விளங்கக் காணலாம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே அறங்களுள் எல்லாம் தலையாய அறமென்று தமிழ் மறை கூறுகின்றது. இவ்வாறு அறநூல் விதித்ததற்கும் மேலாகத் தன்னலம் மறுத்துப் பிறர் நலம் பேணும் பெருந்தகைமை சாலச் சிறந்ததென்பது சொல்லாமலே விளங்கும். தான் அருந்திப் பயன் பெறுமாறு வருந்திப் பெற்ற அருங்கனியை ஒளவையாருடன் பகுத்துண்ணவும் எண்ணாது, முழுக்கனியையும் அக் கவிஞர்க்கு ஈந்து மகிழ்ந்து வள்ளலின் பெருமை உலக முள்ளளவும் அழியாததன்றோ? இப் பண்பினைக் கண்டு வியந்த புலவர் ஒருவர், “கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக் கீந்த அரவக் கடற்றானை அதிகன்” என்று புகழ்ந்துரைத்தார். இத்தகைய அமிழ்தூறும் அருங்கனிகள் தமிழகத்தில் முன்னாளிருந்தமையாலேயே, ‘கனியிருப்பக் காய்கவர்தல் ஆகாது’ என்று ஆன்றோர் கட்டுரைப்பார் ஆயினர். கனி என்னும் சொல் பொதுவாகப் பழங்களை எல்லாம் உணர்த்து மாயினும், சிறப்பு வகையில் அமிழ்தம் பொழியும் அருங் கனியையே குறிக்குமென்பது அறிஞர் கருத்து. “இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” |