பக்கம் எண் :

அறிவும் திருவும்149

நனவோ   என   ஐயுற்று   மனம்   குழம்பினார்.  கீரனது  மன நிலை
அறிந்த   சேரன்,   அவ்   அறிஞரைப்   பற்றி   நின்ற  ஐயத்தையும்
அச்சத்தையும்  ஒருங்கே   அகற்றக்  கருதி,  அன்பளாவிய இன்பமொழி
இயம்பினான்.   அம்   மொழி   கேட்ட   கீரனார்  திடுக்கிட்டெழுந்து
மன்னனுக்குச்  செய்த  பிழையை  நினைந்து  மனம்  பதைத்தார்; மெய்
முழுதும்  நடுங்க,  கண்கள்   அச்சத்தால்   இடுங்க,  மஞ்சத்தினின்றும்
இறங்க  முயன்றார்.  இங்ஙனம்  பாவலர்  மனமும்  மெய்யும்  வருந்தக்
கண்ட  சேரமான்,  அன்புடன்  அமர்ந்து  நோக்கி, மென் மொழி பேசி,
அவர் மனத்திலிருந்து அச்சத்தை மாற்றினான்.

புலவரும்   ஒருவாறு  மனந்தேறி,  நடுக்கம்   தீர்ந்து,   மன்னவன்
பெருமையை   மனமாரப்   புகழலுற்றார்.   செந்தமிழ்  இன்பமே சிறந்த
இன்பமெனக்  கருதிய  சேரமான்  செவி   குளிர,   “அரசே! மெல்லிய
பூம்பட்டு   விரித்த   வீர   மஞ்சத்தில்   எளியேன்  அறியாது  ஏறித்
துயின்றேன். அப் பிழை செய்த  என்னை  நீ  இலங்கு வாளால் பிளந்து
எறிதல்  தகும். எனினும்  தமிழறிந்தவன்  என்று கருதி  என்னை வாளா
விடுத்தாய்!   இஃது   ஒன்றே    தமிழன்னையிடம்   நீ   வைத்துள்ள
அன்பிற்குச்   சாலும்.  அவ்வளவில்   அமையாது, படைக்கலம் எடுத்து
வீசும்   நின்   தடக்   கையினால்   கடையேற்குக்   கவரி    வீசவும்
இசைந்தனையே!    நின்    பெருமையை    ஏழையேன்   என்னென்று
உரைப்பேன்!”   என்று  புகழ்ந்து அவனடிகளில் விழுந்து வணங்கினார்.
தமிழ்ச்  சொல்லின்   சுவையறிந்து   சேரமான்,  அடிபணிந்த  புலவரை
ஆர்வமுற  எடுத்தணைத்து,  பல்லாண்டு  அவர்  பசி  நோய் அகற்றப்
போதிய பரிசளித்து விடை கொடுத்தனுப்பினான்.