அமைந்திருக்கக் கண்டு எல்லையற்ற இன்பம் அடைவர் தமிழறிஞர். வள்ளலும் கவியின் சுவையறிந்து களிப்புற்றார்; ஆயினும் தம் பெருமையைப் பாட்டின் வாயிலாகக் கேட்டபோது நாணித் தலை கவிழ்ந்தார். ஒருநாள், வள்ளலின் மிதியடி காணாமற் போயிற்று. அதைக் கவர்ந்த கள்வனைக் கண்டு பிடிக்க முடியாமல் வருந்தினர் காவலாளர். அச் செய்தியை அறிந்த வள்ளல், சொக்கரைப் பார்த்துப் புன்னகை புரிந்து ‘செருப்புக்கும் திருடனுக்கும்’ பொருத்தமான பாட்டிசைக்கும்படி வேண்டினார். அப்போது எழுந்தது பாட்டு. “அங்கங் களவால் அதுகண் டுதைப்புறலால் எங்கும் மிதியடியென் றேசொல்லால் - வெங்கல் கரடுமுட்கஞ் சாததினால் காமர்முத்துச் சாமி திருடனைஒப் பாகும் செருப்பு” என்ற கவியை விருப்பமாய்க் கேட்ட வள்ளல் ‘செருப்புத் தொலைந்ததால் அன்றோ இச் செய்யுள் கிடைத்தது’ என்று அகமகிழ்ந்தார். அப் பாட்டின் சிலேடை நயத்தைப் பார்ப்போம்; “கள்வனுக்கு அங்கம் களவு; செருப்புக்கு அங்கங்கு அளவு; கள்வனது களவு கண்டு உதைப்பார்கள்; செருப்பின் அளவு கண்டு தைப்பார்கள்; கள்வனை ‘மிதி’ ‘அடி’ என்பார்கள். செருப்பையும் ‘மிதியடி’ என்பார்கள். இன்னும் கல்லும், முள்ளும், கரடும் கண்டு அஞ்சாது செல்வான் கள்வன்; அவ்வாறே கல்லும், முள்ளும், கரடும் கண்டு செருப்பு அஞ்சாது” என்பது இப்பாட்டின் பொருள். |