பக்கம் எண் :

172தமிழ் இன்பம்

“எவ்வுயிரும் பராபரன்சந் நிதிய தாகும்
இலங்கும்உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்.”

ஆதலால்,     எவ்  வுயிர்க்கும்  துன்பம்  செய்தல்  ஆகாது;  எவ்
வுயிர்க்கும் கேடு  விளைத்தல்  ஆகாது; எவ் வுயிரையும் கொல்லலாகாது.
கொல்லாமையைச் சிறந்த கொள்கையாகக் கொண்டது சைவ சமயம்.

“கொல்லா விரதம் குவலயமெ லாம்ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே”

என்று      பாடினார்    தாயுமானவர்.   கொல்லா   விரதத்தை   மிக
உறுதியாகக்   கொண்டமையால்,   சைவம்  என்ற  சொல்லுக்கே புலால்
உண்ணாமை என்னும் பொருள் வந்துவிட்டது.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”

என்று   அறிவுறுத்தினார்  திருவள்ளுவர்.  இதனாலேயே  நாளடைவில்,
புலால் உண்ணாதவன் சைவன்  என்றும்,  புலால்  உண்பவன் அசைவன்
என்றும்  பிரித்துப்  பேசும்   வழக்கம்   இந்  நாட்டில் எழுந்தது. இது,
கொல்லாமையாகிய விரதத்தால் சைவ சமயம் பெற்ற சிறப்பாகும்.

சைவம்,     பரந்த  நோக்கமுடையது.  ‘இவ் வுலகில் சைவ சமயமே
மெய்ச்  சமயம்;  மற்றைய  சமயங்கள்   பொய்ச்  சமயம்’  என்று அது
சொல்லவில்லை.     ‘சிவன்     என்னும்     பெயரால்     கடவுளை
வழிபட்டோர்க்குத்தான்   நற்கதி  உண்டு;   மற்றையோர்க்கு   இல்லை’
என்று  அது  கூறவில்லை;   ஒவ்வொரு   சமயத்திலும்   அருள்புரியும்
பரம்பொருள் ஒன்றே என்பது சைவத்தின் கொள்கை.