பக்கம் எண் :

மொழியும் நெறியும்171

அன்பு     வடிவாகிய  சிவபெருமானை  அடைவதற்கு  அன்பையே
சாதனமாகக் கொள்ளுதல் வேண்டும் என்று சைவ  சமயம்  கூறும், ‘எவ்
வுயிர்க்கும்   அன்பாயிரு’  என்றார்   ஒளவையார்.   இவ்  வுலகத்தில்
அறத்தைக் காப்பது அன்பு;  மறத்தை  அழிப்பது  அன்பு;  இன்பத்தைப்
பெருக்குவது  அன்பு;  துன்பத்தைப்  போக்குவது  அன்பு,  அன்பினால்
ஆகாத  தொன்றில்லை.  இத்  தகைய  அன்பு  நெறியிலே நின்று பணி
செய்தால்,  இன்ப  நிலையாகிய சிவகதி,  தானே  வந்தடையும்  என்பது
சைவ சமயத்தின் கொள்கை.

தெய்வத்       தன்மையாகிய       அன்பு,      இயற்கையாகவே
ஒவ்வொருவரிடமும்   உள்ளது.   அது   வளர்ந்து,  விரிந்து,  பரவுதல்
வேண்டும்.  நாம்  முதலில், பெற்றோரிடம்  அன்பு  செலுத்துகின்றோம்.
பின்பு,   உற்றார்   உறவினரிடம்    அன்பு    செல்கின்றது;  அப்பால்
ஊராரிடம்,   நாட்டாரிடம்,   உலகத்தாரிடம்   படிப்படியாகப்   பரந்து
நிலவுகின்றது. 

இங்ஙனம்    மன்பதையிடம் மட்டும் அன்பு செலுத்தினாற் போதாது;
எல்லா  உயிர்களையும் தன்னுயிர்  போல்  கருத வேண்டும். மண்ணிலே
முளைத்து  வளரும்  செடி  கொடிகளும்,   ஊர்ந்து  செல்லும்  எறும்பு
முதலியனவும்,  பறந்து  செல்லும்  பறவையினங்களும்,  நான்கு  காலால்
நடந்து  திரியும்  விலங்குகளும்,  உயிருள்ள பொருள்களாகும். நம்முயிர்
நமக்கு எப்படிஇனிதோ, அப்படியே ஒவ்வொரு பிராணியும்  தன்னுயிரை
இனிதாகப்  போற்றுகின்றது.  மேலும்,  எல்லா   உயிர்களிலும்   கலந்து
நிற்கின்றார் கடவுள்.