“ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” என்பது அவர் திருவாக்கு. இவ் வண்ணம் பாடிய திரு நாமங்களில் சிவம் என்பது ஒன்று. அஃது ஒரு சிறந்த பெயர். சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் என்னும் பொருள் கண்டார் பண்டைப் புலவர். எனவே, எல்லா மங்கலமும் தரும் பொருள் எதுவோ, அதுவே சிவம், பேரின்ப நிலையாகிய முக்தி, சிவகதியாகும். சிவகதியிற் கொண்டு சேர்க்கும் நெறியைச் சைவம் என்றார்கள். எனவே, சிவன் என்னும் மங்கலப் பொருளை வழிபட்டுச் சிவகதியை அடைவதற்கு வழிகாட்டும் சமயமே சைவ சமயமாகும். இத் தன்மை வாய்ந்த சைவ சமயத்தின் அடிப்படையான கொள்கைகளிற் சிலவற்றைக் காண்போம்: “அன்பே சிவம்” என்ற அருமையான வாசகமும் சைவ சமய நூல்களில் சிறப்பாக விளங்குகின்றது. எண்ணிறந்த குணம் வாய்ந்த இறைவனை அன்பு வடிவமாக எழுதிக் காட்டினார் திருமூலர் என்னும் பெரியார். “அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே” என்பது அவர் அருளிய திருமந்திரம், இதனால், அன்பு நெறியே சிவநெறி என்பது நன்கு விளங்கும். |