பௌத்த சமயக் கொள்கைகள் மணிமேகலை, குண்டலகேசி முதலிய நூல்களில் விளக்கப்பட்டுள்ளன. ‘பிறப்பென்பது துன்பம்; பிறவாமையே இன்பம்’ என்பது அச் சமயத்தின் அடிப்படைக் கொள்கை. அப்படியாயின், பிறப்பை எப்படி ஒழிப்பது? ‘அகப்பற்று, புறப்பற்று என்னும் இருவகைப் பாசமும் பிறப்பிற்கு வித்து; பற்று அற்றால் பிறப்பு ஒழியும் என்பது பௌத்த சமயத்தின் கருத்து. இவ்வுண்மையை மணிமேகலையிற் காணலாம். “பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பே ரின்பம் பற்றின் வருவது முன்னது; பின்னது அற்றோர் உறுவது அறிக.” என்று அறுதியிட்டுக் கூறப்படுகின்றது. எனவே, ‘எல்லாவற்றையும் துறந்தவரே சிறந்தவர்; அவரே பேரின்ப மடையும் பெற்றி வாய்ந்தவர்’ என்னும் கருத்து பௌத்த சமய வாதிகளால் இந் நாட்டில் நன்கு பரப்பப்பட்டது. இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறங்களுள் துறவறமே சாலச் சிறந்ததென்னும் கொள்கை பௌத்த மதபோதனையால் தமிழ் நாட்டில் ஊற்றம் பெற்றது. அப் போதனையாலேயே இள நங்கையாகிய மணிமேகலையும் அவள் தாயும், பிறரும் துறவு நிலை யடைந்தார்கள். துறவறத்தை மேற்கொண்ட புத்தர், கொல்லாமை என்னும் அறத்தின் பெருமையை எல்லார்க்கும் எடுத்துரைத்தார். அக் காலத்தில், வட நாட்டில் பல வகையான யாகங்கள் நடந்து வந்தன. அசுவ மேத |