பக்கம் எண் :

182தமிழ் இன்பம்

பசுவைக்  காணாத  வேதியர்கள்  நாற்றிசையும்  விரைந்து  ஓடினார்கள்;
தேடினார்கள்;  காட்டிலே  அதைக்  கடத்திச்  சென்ற  ஆபுத்திரன்மீது
சாடினார்கள்.   அந்  நிலையில்   பசுவுக்காகப்   பரிந்து  பேசலுற்றான்
ஆபுத்திரன்.  தன்னைப்  பிடித்து அடித்தவரை  நோக்கி,  ‘ஐயரே!  இப்
பசு  உமக்கு  என்ன  தீங்கு  செய்தது?   என்ன  பாவம்  பண்ணிற்று?
அரசன்  விட்ட  நிலத்தில்  மழையால்  முளைத்துத்  தழைத்த  புல்லை
மேய்கின்றது.   இனிய   நல்ல  பாலை   எல்லோர்க்கும்   தருகின்றது.
இத்தகைய பசுவை ஏன் கொல்ல வேண்டும்?”

“விடுநில மருங்கில் படுபுல் லார்ந்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால்
அறந்தரு நெஞ்சொடு அருள்சுரந் தூட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை?”

என்று     வினவினான்.  இவ்வாறு  பசுக்கொலையை  மறுத்த பாலனே
மதுரையம்பதியில்    சிந்தாதேவியால்   அமுதசுரபி  என்னும்  அக்ஷய
பாத்திரம்   அளிக்கப்   பெற்றான்    என்றும்,    அப்  பாத்திரத்தின்
உதவியால்  ஊர்  ஊராகச்   சென்று  பசித்தோர்க் கெல்லாம் வயிறாரச்
சோறிட்டு அறம் வளர்த்தான் என்றும் மணிமேகலை கூறுகின்றது.

பௌத்த    மதம் அக் காலத்தில் பல நாடுகளில் பரவியதற்கும், இக்
காலத்திலும்  பெருஞ்  சமயமாக  நிலைத்திருப்பதற்கும்  சிறந்த காரணம்
அதன்   சங்கமேயாகும்.   பௌத்த   துறவிகளுடைய   கூட்டத்திற்குச்
சங்கம்  என்பது   பெயர்.  முதன்முதல்  காசி  நகரத்தில், புத்தர் ஐந்து
முனிவருக்கு உபதேசம் செய்து சங்கத்தைத்