வோர், வனவிலங்குகள் முதலிய புற்பூண்டுகள் ஈறாக உள்ள எல்லா உயிர்களையும் இறையவரோடிணைத்து அருள் நெறியை இவ் வுலகில் நிலை நிறுத்த முயன்றுள்ளனர்; காட்டில் வாழும் விலங்குகளையும், விண்ணிலே பறந்து திரியும் பறவைகளையும், மண்ணிலே ஊர்ந்து செல்லும் உயிர்களையும், நீரிலே வாழும் மீன்களையும், நிலத்திலே மருவி நிற்கும் மரஞ்செடிகளையும் இறையவரோடிணைத்து அவற்றின் உயிரைக் காக்க ஆசைப்பட்டுள்ளார்கள். காட்டில் வாழும் வேழமும் வேங்கையும், அரியும் பரியும், மானும் மற்றைய உயிர்களும் இறையவர்க்கு உகந்த பொருள்களாகும். வேழத்தின் உரியும், வேங்கையின் தோலும், ஈசன் உவந்து அணியும் உடைகள். வேங்கையின் தோலை அரையிலுடுத்து வேழத்தின் உரியால் ஆகத்தைப் போர்த்துக் கடும் பனியுறையும் கயிலை மாமலையில் சிவபெருமான் வீற்றிருக்கின்றார். இன்னும், விழுமிய வேழம் விண்ணவர் தலைவற்குரிய வாகனமாகும். அன்றியும், ஈசனுடைய தலைமகனாகிய பிள்ளையார் திருமுகம் வேழத்தின் முகமாக விளங்குகின்றது. ஆகவே, உருவத்தால் உயர்ந்த வேழம் ஈசனார்க்கும் இந்திரற்கும், பிள்ளையார்க்கும் இனிய உயிராக இலங்குகின்றது. இத் தகைய யானைக்குத் தீங்கிழைத்தோர் அம் மூவரது சீற்றத்திற்கும் ஆளாவ ரல்லரோ? இன்னும், ஈசன் தோள்களில் ஆரமாக இலங்கும் நாகம் திருமாலின் பாயலாகவும் அமைந்துள்ளது, ஆகவே, நஞ்சமைந்த நாகமும் இறையவர் இருவரைச் சார்ந்து, இனிது வாழ்கின்றது. விலங்கரசு எனப்படும் அரிமான், காளியின் ஊர்தியாகக் களித்திருக்கின்றது, பரிமான் பைரவற்கு உகந்ததாயிற்று. கலைமான் ஈசனார் கையில் இனிதமர்ந்தது. |