பக்கம் எண் :

மேடைப் பேச்சு19

காலத்து       இசைக் கருவிகளில்   சிறந்தன  குழலும் யாழும். யாழ்,
பலதிறப்பட்டதாக   அமைந்திருந்தது.   பாணர்     என்பவர்  சீறியாழ்
என்னும்  சிறிய   யாழைத்   தாம்  செல்லும்  இடமெல்லாம்  எடுத்துச்
சென்றனர்.    சிறிய     யாழ்,    எப்பொழதும்    அவர்   கையகத்து
இருந்தமையால்    அது    ‘கைவழி’    என்னும்   பெயர்   பெற்றது.
இசைவாணராகிய   பாணரைப்   பெருநள்ளி  என்ற  குறுநில  மன்னன்
அன்போடு  ஆதரித்தான்.   அவனைப்   பாடினார்  வன்பரணர் என்ற
புலவர்:

“நள்ளி ! வாழியோ நள்ளி ! நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர்; அதுநீ
பரவுக்கடன் பூண்ட வண்மை யானே !”

என்ற   பாட்டின்  நயம்  அறியத்  தக்கதாகும். ‘அரசே ! பாணர்க்கு நீ
பெருங்கொடை  கொடுக்கின்றாய்.  உன் உணவை உண்டு மயங்கி, இசை
மரபினை   மறந்து  விட்டனர்.   இசைப்பாணர்;   கைவழி    யாழிலே
மாலைப்  பொழுதிலே  பாடுதற்குரிய   செவ்வழிப்  பண்ணைக் காலைப்
பொழுதிலே   பாடுகின்றார்கள்;   காலையில்   பாடுதற்குரிய    மருதப்
பண்ணை   மாலையில்   பாடுகின்றார்கள்;   இதற்குக்  காரணம்   நின்
கொடையே’ என்று  கூறினார்  புலவர். இதனால், பண்டை இசைவாணர்,
பண்களை     வகுத்திருந்ததோடு,        அவற்றைப்    பாடுதற்குரிய
பொழுதையும்       வரையறுத்திருந்தார்கள்      என்பது      இனிது
விளங்குகின்றது,   பண்ணமைந்த   இசை பாடும் பாணர்க்குத்  தமிழரசர்
வரிசையறிந்து    பரிசளித்தார்கள்.     வெள்ளி   நாரால்    தொடுத்த
பொற்றாமரை மலர் பாணர்க்கு உரிய உயர்ந்த பரிசாகக் கருதப்பட்டது,