சங்ககாலப் பெண்மணிகள் அக்காலத்தில் கலையுணர்வு பெற்ற பல பெண் மணிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள், ‘பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்’ என்பது தமிழ்நாட்டாரது பழங்கொள்கை யன்று என்பதற்குப் புறநானூறு ஒன்றே போதிய சான்றாகும். செவ்விய கவி பாடும் திறம் பெற்ற பெண்பாலார் பாடிய அருமை சான்ற பல பாடல்கள் புறநானூற்றிலே சேர்க்கப்பட்டுள்ளன. கரிகாற் சோழன் வெண்ணிப் போரக்களத்திலே பெற்ற வெற்றியை வியந்து பாடினாள் ஒரு பெண். அவள் குயவர் குலத்திற் பிறந்தவள். ‘வெண்ணிக் குயத்தியர்’ என்று புறநானூற்றிலே அம்மாது போற்றப்படுகின்றாள். இன்னும், நப்பசலையார் என்ற நல்லிசைப் புலமை மெல்லியலார் மலையமான் திருமுடிக் காரியையும் பிறரையும் பாடியுள்ளார். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள கொற்கை மூதூரைச் சூழ்ந்த மாறோக்கம் என்ற நாட்டிலே தோன்றியவர். இன்னும், அக்காலத்திய அரசராலும் அறிஞராலும் பெரிதும் பாராட்டப்பெற்ற ஒளவையாரை அறியாதார் யாரோ? ஆகவே, ஆண் பெண்ணாகிய இரு பாலாரும் முற்காலத்தில் கல்வியறிவால் மேம்பட்டிருந்தார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. வீரத் தாய்மார்கள் இன்னும், வெம்மை சான்ற போர்க்களத்தில், அஞ்சாது நின்று அமர் புரியுமாறு, தாம் பெற்ற அருமை மைந்தரை ஊக்கி அனுப்பிய வீரத்தாயரும் அக்காலத்தே விளங்கினர். மாற்றார்க்குப் புறங்கொடாது, மார்பிலே புண்பட்டு இறந்த மைந்தனது மேனியைக் கண்ட நிலையில், பெற்ற போதினும் பெரியதோர் இன்பம் அடைந்தாள் ஒரு தாய். மற்றொரு வீரமாது, |