பக்கம் எண் :

204தமிழ் இன்பம்

அறம்     நிரம்பிய  தலைவரிடம்       இத்  தகைய  கரையிறந்த
கருணையையும், வரையிறந்த    பொறுமையையும் கண்ட வலிமை சான்ற
தம்பியர்     சில      வேளைகளில்    வருத்தமுற்றுக்    கோபத்தாற்
கொதித்தார்கள்.    மாற்றார்  படையைக்  கண்டு கலங்காத இளையோர்,
மூத்தோரது     பண்பாட்டைக்   கண்டு   கலங்கினார்கள்.  மானத்தால்
மனமிடிந்த    தமிபியர்,  மாற்றரசரிடம்   வில்லாட இசைந்தனரேயன்றிச்
சொல்லாட இசைந்தாரல்லர்.  ‘தேவியை விடுகின்றானா அன்றி ஆவியை
விடுகின்றானா’    என்றறிந்து     வருமாறு     இராமன்   தூதனுப்பத்
துணிந்தபோது,   எவருக்கும்   இளையாத    இலக்குவன்   தமையனை
நோக்கி,  “ஐயனே!  இலங்கை   அரக்கன்  உன்  தேவியைச் சிறையில்
வைத்தான்;   தேவரை   இடுக்கண்   செய்தான்;   அந்தணரை  அலற
வைத்தான்;  இந்திரனுக்கு இடர்  விளைவித்தான்;  மாயம் விளைவித்துச்
சீதையை   மயங்க    வைத்தான்;  சஞ்சலத்தால்   நைந்த   மங்கைக்கு
‘அஞ்சேல்’     என்று     அபயமளித்த     கழுகின்    வேந்தனைக்
கருணையின்றிக்   கொன்றான்.    இத்தகைய   பாவியின்   ஆவியைப்
போக்காது   அருள்  காட்டலாகுமோ?”  என்று   வெகுண்டுரைத்தான்.
அவ்வுரையை  அமையக்    கேட்ட  அயோத்தி  அண்ணல், புன்னகை
பூத்து,   “புயவலி    அமைந்திருப்பினும்   பொறையொடும்  பொருந்தி
வாழ்வதே  ஏற்றதாகும்.   அதுவே   அறமு  மாகும்”  என்று  மாற்றம்
உரைத்தான்.

இவ்     வண்ணமே வம்பு  செறிந்த   வணங்காமுடி  மன்னன்பால்
கண்ணனைத்   தூதனுப்பத்    துணிந்தபோது    தண்டேந்திய   வீமன்
தருமனை  நோக்கி,  “ஐயனே!  பன்னலம்  திகழும் பாஞ்சாலி, பாவியர்
கைப்பட்டு,.