பக்கம் எண் :

இருமையில் ஒருமை205

“ஆறாகி இருதடங்கண் அஞ்சனவெம்
   புனல்சோர அளகம் சோர
வேறான துகில்தகைந்த கைசோர
   மெய்சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா
   என்றுஅரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்தூற உடல்புளகித்து
   உள்ளமெலாம் உருகி னாளே.”

அந்     நிலையில் தலைகவிழ்ந்து  பொறுத்திருந்த  நமக்கும்   நம்
மரபினுக்கும் என்றும் தீராத  வசை தந்தீர்;  அப்பால்  பதின்மூன்றாண்டு
காட்டிலும்  நாட்டிலும்   கழித்த   பின்னரும்  அமர் புரிந்து, மாற்றரசர்
உடலம்  துணித்து  உலகாளக்   கருதாது,  இன்னும் தூதனுப்பி பணிந்து
இரந்து  புவி  பெற்று  உண்டு  இருப்பதற்குத்  துணிகின்றீரே! அந்தோ!
அரவுயர்த்தோன் கொடுமையினும்,  முரசுயர்த்தோய்!  உமது  அருளுக்கு
அஞ்சினேன். ஐயோ! இந்தத் தமையன்,  வாடுகின்ற  மடப்பாவை  வரம்
முடித்தான்; இளையவர் கூறிய வஞ்சினம் முடித்தான்;

“மலைகண்ட தெனஎன்கை மறத்தண்டின்
   வலிகண்டும் மகவான் மைந்தன்
சிலைகண்டும் இருவர்பொருந் திறல்கண்டு
   எமக்காகத் திருமால் நின்ற
நிலைகண்டும் இவள்விரித்த குழல்கண்டும்
   இமைப்பொழுதில் நேரார் தம்மைக்
கொலைகண்டு மகிழாமல் அவன்குடைக்கீழ்
   உயிர்வாழக் குறிக்கின் றாயே”