கொற்றவர்க்கும் உண்மையான கோதில்ஞான சரிதராம் நற்றவர்க்கும் ஒன்றுசாதி நன்மைதீமை இல்லையால்” என்றபடி அவ் வீரனை ஆதரித்து வளர்த்து, அங்க நாட்டுக்கு அரசனாக்கி, அவனுடன் தோழமை கொண்டான்; தன் தம்பியரும் சுற்றமும் அவன் அடி வணங்குதற்குரிய தோற்றமும் ஏற்றமும் அளித்தான். அநாதையாக ஆற்றில் மிதந்து வந்த தன்னை அன்போடு எடுத்து வளர்த்து, அரசுரிமையும் அளித்து, அயலார் மதிக்குமாறு அரும் பதவியும் நல்கிய துரியோதனனைக் கர்ணன் அருமையாய்ப் போற்றினான். பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் கடும்போர் நிகழும் என்றறிந்த கண்ணன், அறநெறி துறந்த துரியோதனன் படையில் ஒப்புயர்வற்ற வீரனாக விளங்கிய கர்ணனை எளிதில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்தான்; ஆதலால், அவனை ஐவரோடும் சேர்க்க விரும்பினான்; அதன் பொருட்டுக் குந்தி தேவியைக் கர்ணனது மாளிகைக்கு அனுப்பினான். கர்ணனும் அப் பெருமாட்டியை அன்பினால் இன்புற வணங்கி ஆசனத்தமர்த்தினான். அப்போது குந்திதேவி தன் மைந்தனைக் குழைந்து நோக்கி, “ஐயனே, யானே உன்னை ஈன்ற தாய்; கதிரவன் அருளால் என்பால் நீ பிறந்தாய்; பழியஞ்சி உன்னைப் பேழையில் விடுத்தேன்” என்றுரைத்துப் பால்சோர நின்றாள். கர்ணனும் தன் அன்னை அவளே என்று ஐயமற அறிந்தான்.அந் நிலையில், வீர மைந்தனை அன்போடு அணைத்து, பொன்முடி மோந்து, “ஐயனே! உன்னை வளர்த்தெடுக்க நல்வினை செய்திலேன்; ஆயினும், |