பக்கம் எண் :

இருமையில் ஒருமை215

33. காளத்தி வேடனும் கங்கை வேடனும்*

தமிழ்நாட்டுக்   காளத்தி  மலையிலே  தோன்றினான்  ஒரு வேடன்.
வடநாட்டுக்  கங்கைக்  கரையிலே  பிறந்தான்  மற்றொரு வேடன்.அவ்
விருவராலும்  வேடர்  குலம்  பெருமையுற்றது.  காளத்தி   வேடனைக்
கண்ணப்பன்  என்றும்,  கங்கை  வேடனைக்  குகன் என்றும் இலக்கிய
உலகம் போற்றும், இருவரும் உயரிய  அன்பு நெறியைக்  கடைப்பிடித்து
அழியாப்  புகழ்  பெற்றனர்.

காளத்திநாதன்பால்     வைத்த   அன்பினால்  தன்  கண்ணையும்
பெயர்த்தெடுத்த  கண்ணப்பன்  பெருமை   தமிழ்  நாடெங்கும்  பரவி
நின்றது.     எல்லையற்ற    அன்பிற்கு    அவ்வேடர்   பெருமானே
எடுத்துக்காட்டாயினார்.

“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப்ப ணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
கண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்று    வண்டை  நோக்கிப்  பாடும்   பான்மையில்  கண்ணப்பனது
எல்லையற்ற   அன்பின்    திறத்தினை   மாணிக்க   வாசகர்   நன்கு
விளக்கியுள்ளார்.  திருவாசகத்திலும்   தேவாரத்   திருப்பாசுரங்களிலும்
கண்ணப்பன்


* நேமத்தான்பட்டி,     திருநாவுக்கரசு       வித்தியாசாலையின்
பதின்மூன்றாவது   ஆண்டு  விழாவில்  நிகழ்த்திய  சொற்பொழிவின்
சுருக்கம்.