பெருமை பேசப்படுதலால் சைவ சமயத்தை நிலைநிறுத்திய நால்வருக்கும் அவன் முந்தியவன் என்பது நன்கு விளங்குகின்றது. காளத்திநாதனை வணங்கிய திருஞானசம்பந்தர் கும்பிட்ட பயன் காண்பார்போல் வேடர் பெருமானாகிய கண்ணப்பனைக் கைதொழுதாரென்று சேக்கிழார் அழகாக எழுதிப் போந்தார். கவிக்கு நாயகராகிய கம்பர் இராம கதையை வடமொழிக் காவியத்தினின்றும் எடுத்துக்கொண்டாரேனும் அதமைத் தமிழ் நாட்டாருக்கு ஏற்ற முறையில் ஒதுக்கி இனியதொரு விருந்தாக அளித்துள்ளார். இராமனிடம் அன்பு பூண்ட கங்கை வேடனை உருவாக்கும் பொழுது, கம்பர் உள்ளத்தில் காளத்தி வேடன் வடிவம் கனிந்து இலங்கிற்று.காளத்தி வேடனைக் கருவாகக் கொண்டு கங்கை வேடனாய குகனை அவர் வார்த்து வடித்துள்ளாரென்று தோற்றுகின்றது. இதற்கு இரண்டொரு சான்றுகள் காட்டுவேன்: கோசல நாட்டு இளவரசனாகிய இராமன், தாயின் சொல்லைத் தலைக்கொண்டு, தனக்குரிய நாடு துறந்து, கங்கைக் கரையை வந்தடைந்தான் என்று அறிந்த குகன் அக் குரிசிலைக் காணப் புறப்பட்டான். வான்மிக எழுதிய வடமொழிக் காவியத்தில் குகன் இராமனைக் காணப் புறப்படும் கோலம், ஓர் அரசன் மற்றோர் அரசனைக் காண எழுகின்ற தன்மையில் அமைந்திருக்கின்றது. ஆனால் கம்பர், ஆண்டவனைக் காணச் செல்லும் அடியவனாகக் குகன் கோலத்தைத் திருத்தியமைத்துள்ளார். “தேவா நின்கழல் சேவிக்க வந்தனன் நாவாய் வேட்டுவன் நாயடியேன்” என்று குகனே கூறுதலால் இவ்வுண்மை விளங்கும். |