பக்கம் எண் :

இருமையில் ஒருமை227

“உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான் 
உத்தர மாமதுரைக்(கு) அச்சென்ப - இப்பக்கம்

மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்

போதார் புனற்கூடற்(கு) அச்சு"
  

என்பது நல்கூர் வேள்வியார் பகர்ந்த நல்லுரை.

முன்னாளில்    பாடலிபுத்திரம்  என்னும்  பெயருடைய  இரு நகரங்கள்
பாரத நாட்டில்  சிறந்து விளங்கின;  அவற்றுள் ஒன்று வடக்கே கங்கைக்
கரையில்  இருந்தது;   மற்றொன்று   தெற்கே  கெடில  நதிக்  கரையில்
இருந்தது.  அசோக   மன்னன்   காலத்திலே   சிறந்து விளங்கிற்று வட
நாட்டுப்   பாடலிபுத்திரம்.   பல்லவ  மன்னர் காலத்தில் புகழ் பெற்றுத்
திகழ்ந்தது   தென்னாட்டுப்   பாடலிபுத்திரம்.  இப்  பாடலி  நகரங்கள்
இரண்டும் கலைக் களஞ்சியங்களாகக் காட்சியளித்தன.

தமிழ்   நாட்டுப் பாடலிபுத்திர நகரில் அமைந்த சமணக் கல்லூரியின்
பெருமையைக்      கேள்வியுற்றார்      திருநாவுக்கரசர்.  கலைஞானக்
கோயிலாய்   விளங்கிய    அக்   கல்லூரியை  நாடிற்று  அவருள்ளம்.
அப்போது  அவருக்குத்   தந்தையுமில்லை,  தாயுமில்லை;  தமக்கையார்
ஒருவரே  இருந்தார்.   அவரிடம்   விடைபெற்றுப் பாடலிக் கல்லூரியிற்
சேர்ந்தார்    திருநாவுக்கரசர்.    அவருடைய   கலையார்வமும்   மதி
நுட்பமும்   சமணப்  பேராசிரியர்களின் உள்ளத்தைக் கவர்ந்தன.  கலை
பயின்ற   மாணவரின்   இளமையுள்ளம்   சமண சமயத்தில் கவிழ்ந்தது.
அது  கண்டு  மகிழ்ந்த சமண  முனிவர்கள்  அவரைச் சமண மதத்திலே
சேர்த்தார்கள்; தரும சேனர் என்ற பெயரையும் சூட்டினார்கள்.