“செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும் தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும் வழங்குகொடை மகராசர் குறும்பலவி லீசர் வளம்பெருகும் திரிகூட மலையெங்கள் மலையே” “அம்மே! எனது குற்றால மலையில் கொத்துக் கொத்தாய்த் தொங்கும் மாம்பழங்களை வானரங்கள் பறித்துப் பந்து அடித்து விளையாடும்; வானுற ஓங்கிய மரங்களின் மலர்கள் விண்ணுலகில் வெடித்து மணம் கமழும்; இத்தகைய மலைக்கு உன் மலை இணை ஆகுமோ?” என்று இறுமாந்து கூறினாள். இவ்வாறு குற்றால மாது கூறிய மாற்றம் பொதியமலை மாதின் மனத்தை வெதுப்பியது. வண்ணமான சொற்களால் தன் மலைவளம் கூறத் தொடங்கினாள்: “கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்குவல்லி எடுப்போம் குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக் கொடியில்வைத்துத் தொடுப்போம் பழும்பிழிந்த கொழுஞ்சாறுந் தேறுலும்வாய் மடுப்போம் பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே யுடுப்போம் செழுந்தினையும் நறுங்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கை புலித்தோலின் பாயலின்கண் படுப்போம் |