பக்கம் எண் :

240தமிழ் இன்பம்

லாக      இன்பத்தேன்  வந்து  பாய்வதாகும்.  இத்   தமிழ்  நாட்டில்
வாழ்ந்த   அறிஞர்,   இனிமையும்  தமிழும் வேறென்று அறிந்தாரல்லர்;
தமிழ்  என்னும்   பதத்திற்கே   இனிமை  என்ற பொருள் கண்டார்கள்.
இத்  தகைய   இனிமை   வாய்ந்த  தமிழ் ஒலி, இன்னொலியாய், இன்ப
ஒலியாய்,   ஆனந்தத்   தேன்  சொரியும்  அழகிய  ஒலியாய் இனிமை
பயப்பது    இயல்பே   யன்றோ?   இன்னும்,  இந்  நாட்டைத்  தந்தை
நாடென்று   கருதும்   பொழுது,  அத்  தந்தையின் மக்களாய்ப் பிறந்த
நமது   உரிமை,   மனத்தில்  முனைந்து தோன்றவதாகும். இவ்வுரிமைக்
கருத்து   உள்ளத்தைக்   கவரும்பொழுது  வீரம் கிளம்புகின்றது. தாயை
அன்பின்   உருவமாகவும்,  தந்தையை  வீரத்தின் வடிவமாகவும் கருதிப்
போற்றுதல்  தமிழ்  வழக்காகும்.  அந்த முறையில் தமிழ்நாட்டைத் தாய்
நாடு  என்று   நினைக்கும்   பொழுது  அன்பினால் இன்பம்  பிறக்கும்;
தந்தை நாடு   என்று கருதும்போது, ஆண்மையால் வீரம் பிறக்கும். இவ்
வுண்மையை  உணர்த்தக்   கருதிய   பாரதியார்,  முதலில்   தாயன்பை
அமைத்து,   பின்பு   தந்தையின்  வீரத்தைப்  பேசும்  முறை, அறிந்து
போற்றுதற்குரியதாகும்.    இறைவனைத்    தாய்வடிவாகவும்   கொண்டு
அம்மையப்பர்  என்று   வணங்கும்   முறைமையும்   இக்  கருத்தையே
வலியுறுத்துகின்றது.    பாசங்களினின்றும்    நீங்கிப்  பேரின்பம்  பெற
விரும்பிய  பெரியார்,   ‘அம்மையே,  அப்பா ஒப்பிலா மணியே’ என்று
இறைவனை  முதலில்   அன்னையாகவே  கருதி அகங்குழைவாராயினர்.
ஆகவே,  செந்தமிழ்   நாடு,  முதலில்  எம்  தாய்நாடு;  அப்பால் எம்
தந்தை   நாடு!    இதுவே    உண்மைத்   தொண்டராய்   உழைக்கும்
உயர்ந்தோர்  உளப்   பான்மையாகும்;   மெய்யன்பு  வாய்ந்த   தமிழர்
உணர்ச்சியாகும்.