நஞ்சுண்டும் சாகாதிருக்க நாவுக்கரசரை நசுக்கித் சிதைக்குமாறு கடக்களிற்றை அவர்மேல் ஏவப் பணித்தான் காவலன். கட்டவிழ்த்துவிட்ட கொலைக்களிறு கூடத்தைக் கத்தி ஒரு குன்றமெனப் புறப்பட்டது. வெஞ்சின வேழத்தைக் கண்ணுற்ற அப்பர் சிறிதும் சஞ்சலமுற்றாரல்லர்; செஞ்சடைக் கடவுளின் அடியார்க்கு, “அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவதும் இல்லை” என்று நெஞ்சுருகிப் பாடினார். தறுகண் வேழம் வெம்மை நீத்து நாவுக்கரசரை வலம் வந்து தாழ்ந்து இறைஞ்சி எழுந்து சென்றது. மதவேழத்தின் செருக்கை யடக்குமாறு திருநாவுக்கரசர் பாடிய பாட்டே, “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே” என்னும் பல்லவிக்கு அடிப்படை என்று கருதுவது தவறாகாது. எஞ்ஞான்றும் பதவித் தருக்கும் படைச் செருக்கும் உற்ற அரசர், உலகின் அச்சாணி யன்ன ஆன்றோரையும், மக்கள் கருத்தில் உச்சமாக நின்று நிலவும் பெரியோரையும் துச்சமாகக் கருதித் தூறு செய்வதுண்டு. சைவ சமய சீலராக விளங்கிய திருநாவுக்கரசரையும் பலவாறு ஒறுக்கத் துணிந்த பல்லவ மன்னன் இவ் வுண்மைக்கு ஓர் எடுத்துக் காட்டாயினான். இத் தகைய உலகியலை நன்கறிந்த பாரதியார், “துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்று பாடினார். இன்னும், “ஊனம் ஒன்றில்லாத இறைவனுக்கு ஆட்பட்ட உத்தமர்” வேறொன்றையும் பொருளாகக் |