கருதார். மண்ணும் விண்ணும் நிலைகுலைந்தாலும் ஞாயிறும் திங்களும் திசைமாறினாலும் அன்னார் மனந் துளங்குவ தில்லை, இவ் வுண்மையை, “வானந் துளங்கிலேன் மண்கம்ப மாகிலேன் ............... ஊனமொன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே” என்று அப்பர் தம் தேவாரத்தில் அருளிப் போந்தார். அவ்வான்மத் திறலின் அருமையறிந்த பாரதியார், “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்று கற்றாரும் கல்லாரும் அறியும் முறையில் விளக்கிப் போந்தார். திருநாவுக்கரசர் பெருமையை உலகறியக் காட்ட விழைந்த இறையனார் வானிள மங்கையரை அப்பர் பால் விடுத்து அவரைப் பதம் பார்க்கப் பணித்தார். அம் மங்கையர் கண்ணோளி வீசித் திருநாவுக்கரசர் உழவாரத் தொண்டாற்றிய இடந்தோறும் தோன்றி நடமாடினர். வேற்படையினும் கொடிய அன்னார் கண்களைக் கண்டு நாவரசர் சிறிதும் கலங்கினா ரல்லர்; தளர்ந்தா ரல்லர். உரன் என்னும் கருவியால் ஐம்போறிகளையும் காத்து நின்ற அப்பரை வெல்ல இயலாது வான் மங்கையர் தோற்றொழிந்தார். காதல் புரியும் மாதரார், “கண்கள் வீசு போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்ற பாரதியார் பாட்டு இவ் வரலாற்றை நினைவூட்டுகின்றது. ஆகவே, முற்காலக் கவிஞராகிய திருநாவுக்கரசரது வீர வாழ்க்கையும் வீரப் பாடலும் பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்து வீரக் கவிதையை விளைத்தன என்று கூறுதல் மிகையாகாது. |