பக்கம் எண் :

பாரதியார் பாட்டின்பம்257

40. தமிழ்த் தாய் வாழ்த்து

தமிழ்மொழி   வழங்கும் தென்னாடு தெய்வத் திருநாடென்று அறிந்து
வணங்கத்   தக்கதாகும்.     ‘பழமறைகள்   முறையிடப்   பைந்தமிழ்ப்
பின்சென்ற’   திருமால்,   வடசொற்கும்     தென்சொற்கும்  வரம்பாய்
அமைந்த    வட   வேங்கட     மலையில்   நின்று   அருந்தமிழைக்
காக்கின்றான்.  நீலத்திரைக்    கடல்  ஓரத்திலே  நின்று  நித்தம் தவம்
செய்யும்  கன்னித்  தெய்வம்   கருங்கடலைக்    கையமர்த்திக்  காவல்
புரிகிறாள்.  இன்னும்,  ‘நீண்ட  தமிழால்    உலகை நேமியின் அளந்த’
முத்தமிழ்  முனிவர்,  புகழ்  பூத்த    பொதிய  மாமலையில்  அமர்ந்து
தமிழகத்தைக்  கண்ணினைக்    காக்கும் இமைபோல் காத்தருள்கின்றார்.
இங்ஙனம்  வடபால்    நீலமேனி   நெடியோனும்,  தென்பால்  கன்னித்
தெய்வமும்,  குடபால்   அருந்தவ முனிவரும் கருத்துற நோக்கிக் காவல்
புரிதலால்    செந்தமிழ்நாடு  தெய்வக்  காவலில் அமைந்த திருநாடாகப்
பாரதியார் உள்ளத்திலே தோன்றுகின்றது.

இத்     தகைய திருநாட்டில்   பிறந்து வளர்ந்த   தாய் மொழியின்
முற்காலப்    பெருமையையும்,   பிற்காலச்     சிறுமையையும்   தமிழ்
மக்களுக்கு  உணர்த்த  ஆசையுற்ற   கவிஞர், தமிழ்த் தாய் முறையிடும்
பான்மையில் உருக்கமாக ஒரு பாட்டுப் பாடியுள்ளார்.