பக்கம் எண் :

38தமிழ் இன்பம்

இவர்    பெருமை     குறிக்கப்படுகின்றது.       கண்ணகி   வாழ்ந்த
காவிரிப்பூம்பட்டினத்தில்,

“குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறன் மரபின் பெரும்பாண் இருக்கையும்” 

என்று     அவர் இருந்த வீதி புகழப்படுகின்றது.  தேவாரம்   எழுந்த
காலத்தில்  திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்னும்  சிவனடியார் ஒருவர்
யாழிசையில் வல்லவரா யிருந்தார். அவர்  திருஞான சம்பந்தரோடு பல
தலங்களுக்கும்  சென்று அவர்   பாடிய   தமிழ்ப்   பாட்டை யாழிலே
இசைத்துக்  கேட்போர்  செவிக்கும் சிந்தைக்கும்  இனிய இசை விருந்து
அளித்தாரென்று     திருத்தொண்டர்     புராணம்    தெரிவிக்கின்றது.
இத்தகைய சிறந்த மரபு  இப்பொழுது  தமிழகத்திலே தூர்ந்து போயிற்று.
பாணர்   என்ற  இனத்தார் இன்று தமிழநாட்டில் இல்லை.   அன்னார்
கையாண்ட     இசைக்    கருவியாகிய   யாழும்        இப்பொழுது
காணப்படவில்லை. எனவே, முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து
மறைந்து   போன   ஓர்  இன்னிசைக்  கருவியையும்,  அக்கருவியிலே
தமிழ்ப்     பாட்டிசைத்த   ஒரு    பழங்குலத்தின்       பெயரையும்
இக்காலத்தார்க்கும் பாதுகாத்து  வைத்திருப்பது யாழ்ப்பாணமேயாகும்.   

நமது     தாய்மொழியாகிய தமிழ் இவ்வுலகிலுள்ள  செம்மை சான்ற
தொன்மொழிகளுள்  ஒன்று.  மன்னரும்   முனிவரும்   அம்மொழியைப்
பேணிவளர்த்தார்கள்.   அறிவு   வளர்ச்சிக்கும்   ஆன்ம  நலத்திற்கும்
சாதனமாகிய    நூல்கள்    தமிழ்     மொழியிலே    சாலச்   சிறந்து
விளங்குகின்றன. இத்தகைய விழுமிய மொழியைத் தாய்மொழி