பக்கம் எண் :

4தமிழ் இன்பம்

திட்டம்       உயர்தரப்பள்ளிகளுக்கே     யாயினும் ,     அதனோடு
நின்றுவிடப்      போவதில்லை.    கல்லூரியிலும்    கலைகளெல்லாம்
தாய்மொழியின்    மூலமாகவே    கற்பித்தல்    வேண்டும்   என்னும்
ஆணையை   அவர்   ஒல்லையிற்  பிறப்பிப்பார் என்று நம்புகின்றோம்.
அதற்குரிய    கலைச்சொற்களை    ஆக்கும்  பணியில்  இப்பொழுதே
தமிழறிஞர்  தலைப்படல்   வேண்டும்.  கலைச்சொல்லாக்கம் வேகமாகச்
செய்யக்கூடிய  வேலையன்று.   பல்லாற்றானும்   பதைப்பற ஆராய்ந்து,
தமிழின்   நீர்மைக்கு    ஏற்றவாறு    கலைச்சொற்  காணுதலே  தமிழ்
மொழிக்கு ஆக்கம் தருவதாகும்.

இனி,  வருங்காலத்தில்  தமிழ்  ஆசிரியர்கள்  செய்தற்குரிய  சிறந்த
வேலைகள்    பல   இருக்கின்றன.    குடியரசாட்சியில்    பேச்சுக்கும்
எழுத்துக்கும்    பெருஞ்   சிறப்புண்டு.    தமிழ்மேடையில்    நிகழும்
பேச்சுக்களைச்      சுருக்கெழுத்திலே      எடுக்கும்      கலையைத்
தமிழாசிரியர்கள்  கற்றுக்கொள்ள   வேண்டும்.  இன்று பத்திரிகையுலகம்
பெரும்பாலும்    தமிழ்ப்    பேச்சுக்களை   மதிப்பதில்லை;   பிரசுரம்
செய்வதில்லை.   திருவள்ளுவர்   முதலிய  புலவரின் நினைவு நாட்கள்
பெரும்    விழாவாகக்   கொண்டாடப்படுகின்றன.   அவ்விழாக்களிலே
பெரும்  புலவர்கள்  பேசுகின்றார்கள் ;  பல்லாயிரக்  கணக்கான மக்கள்
வந்து  கேட்கின்றார்கள்.   கிளர்ச்சி  பெறுகிறார்கள்; பயனடைகிறார்கள்.
ஆனால்  ,  அந்  நிகழ்ச்சிகளைப்   பற்றித்   தமிழ்நாட்டு  ஆங்கிலப்
பத்திரிகைகளில்  விவரமாக  ஒன்றும் காண முடியாது, பத்திரிகைகளிலும்
சிலவற்றைத்   தவிர,    மற்றவை    ஏனோ    தானோ   என்றுதான்
அந்நிகழ்ச்சிகளை    வெளியிட்டிருக்கும்.   இந்த  நிலையை  மாற்றவே
வேண்டும். அதனை மாற்றும் ஆற்றல் தமிழறிஞரிடம் இருக்கின்றது.