பக்கம் எண் :

மேடைப் பேச்சு5

நாடெங்கும்     தமிழார்வம்  நிறைந்துவிட்டால்  பத்திரிகைகள்  தாமே
தமிழிற்    கவிந்து    வரும்.    தமிழ்ப்   பேச்சுக்களைப்  பரப்புகின்ற
பத்திரிகைகளைப்     பெருவாரியாகத்    தமிழ்   மக்கள்   ஆதரிக்கத்
தலைப்பட்டால் இன்றுள்ள நிலை நாளையே மாறிவிடும்.

ஆதலால்   , தமிழ் அறிஞர்களே ! தமிழ் நாடெங்கும் தமிழ்ச்சங்கம்
நிறுவுங்கள்;    தமிழ்ப்பாடம்   சொல்லுங்கள்;  கலைச்செல்வத்தை வாரி
வழங்குங்கள்;     தெருவெல்லாம்    தமிழ்     முழக்கம்    செழிக்கச்
செய்யுங்கள்.   இவ்விதம்   ஒல்லும்   வகையால்  நாம் ஒவ்வொருவரும்
பணி    செய்வோமானால்    இன்னும்  பத்தாண்டுகளில்  தமிழ்  நாடு
புத்துயிர்  பெற்றுவிடும்.   அக்   காலத்தில் நாடு முற்றும் தமிழுணர்ச்சி
பொங்கித்  ததும்பிப்  பூரணமாய் நிற்கும். கல்லூரிகளில் நல்லாசிரியரகள்
எல்லோரும்  தமிழறிஞராயிருப்பர்.   பல்கலைக்   கழகங்களில்  நக்கீரர்
போன்ற  நற்றமிழ்ப்  புலவர் தலைவராக  வீற்றிருப்பர். ’எந்த மொழியும்
நமது சொந்த மொழிக்கு  இணையாகாது’  என்று தமிழ் நாட்டு இளைஞர்
செம்மாந்து  பேசுவர்;  ’தேமதுரத்  தமிழோசை  உலகமெல்லாம்  பரவும்
வகை செய்வோம்’  என்று  முரசு கொட்டுவர். எட்டுத் திசையிலும் தமிழ்
நாடு  ஏற்றமுற்று  விளங்கும்.  அந்த   நிலையினை   இன்று எண்ணிப்
பாரீர் ! அதனை எய்தியே தீர்வோம் ; பணிசெய்ய வாரீர் !