என்று மனம் உருகிப் பாடினார், எனவே, இறைவன் அருளைப் பெறுவதற்குத் தமிழிசையே சிறந்த சாதனம் என்னும் கொள்கை தமிழ் நாட்டில் பரவிற்று. சிவனடியார்களும் திருமாலடியார்களும் அருளிய அருட்பாடல்கள் நாடெங்கும் பரவிய பான்மையால் பக்தி வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நின்றது. இறைவனுக்குத் திருக்கோவில் கட்டும் பணியிலே ஈடுபட்டனர் தமிழ் மன்னர். தேவாரப் பாடல் பேற்ற ஸ்தலங்களும் ஆழ்வார்களின் மங்களா சாசனம் பெற்ற திருப்பதிகளும் பொதுமக்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. ’கோவில் இல்லா ஊரில் குடி இருத்தல் ஆகாது’ என்னும் கொள்கையும் எழுந்தது, இங்ஙனம் ஊர் தோறும் எழுந்த கோவில்களில் தெய்வத் தமிழ்ப் பாடல்களை நாள்தோறும் பாடுதற்குரிய முறை வகுக்கப்பட்டது. சிவாலயங்களில் தேவாரம் முதலிய திருமுறைகளை விண்ணப்பம் செய்யும் இசைவாணர் ஓதுவார் என்று பெயர் பெற்றனர், “காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஒது வார்தமை நல்நெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சி வாயவே” என்று திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் ‘ஓதுவார்’ என்னும் சொல் ஈசன் புகழைப் பாடுவார் என்று பொருள் படுகின்றது. வழிபாட்டுக் காலங்களில் ஓதுவார் என்னும் தமிழிசை வாணர்கள் பக்திச் சுவை நிரம்பிய பாடல்களை பண்ணோடு பாடிய பொழுது அவற்றை அன்பர்கள் செவியாரப் பருகினர்; உள்ளம் உருகினர். எனவே, ஆதியில் அரசரால் ஆதரிக்கப் பெற்ற இசைத் தமிழ், இடைக் காலத்தில் ஆலயங்களின் ஆதரவு பெற்று வளர்ந்தது. |