பக்கம் எண் :

48தமிழ் இன்பம்

இயற்கையோடு      இசைந்து இன்புறும்    தன்மையினராகிய தமிழ்
மக்களது   வாழ்க்கையின்   பல  துறைகளிலும்  கலந்து  இசைப் பாட்டு
வளமுற்றது,  வேளாண்மை  என்னும்  பயிர்த்   தொழில்  இந்நாட்டிலே
தொன்று  தொட்டு  நிகழும்  பழுதற்ற  தொழிலாகும்.    அத்தொழிலை
மேற்கொண்ட   பணியாளர்    நெற்றி   வேர்வை    நிலத்தில்  விழப்
பாடுபடும்போதும் நல்ல  பாட்டிசைத்தார்கள்.  கிணற்றிலிருந்து  தண்ணீர்
இறைத்து  நிலத்திலே  பாய்ச்சும்   பொழுது  ஏற்றப்  பாட்டு;   நாற்று
நடும்பொழுது நடுகைப் பாட்டு;  அறுப்புக்  களத்தில்  ஏர்க்களப் பாட்டு
ஆக,  பயிர்த்  தொழிலாளரது  பாட்டு  பலவாகும்;  இன்னும்  குறிஞ்சி
நிலத்திலே  குறத்திப்  பாட்டு  ஒலிக்கும்.   மருத நிலத்திலே  பள்ளுப்
பாட்டு  முழங்கும்.   பெண்கள்   பந்து விளையாடும் பொழுது  பாட்டு;
அம்மானை  ஆடும்  பொழுது  பாட்டு;  தாலாட்டும்  பொழுது  பாட்டு.
சுருங்கச்  சொல்லின்   தமிழ்நாட்டில்   பாட்டில்லாத  பணியே இல்லை
என்பது மிகையாகாது.

போர்களத்தைப்     பற்றிய இசைப்  பாட்டும் இந் நாட்டில் உண்டு.
அவற்றுள்  தலைசிறந்தது   ‘கலிங்கத்துப்  பரணி’   என்னும் தாழிசைப்
பாட்டாகும்.   தமிழ்நாட்டுப்   பெருவேந்தனாகிய குலோத்துங்க சோழன்
கலிங்க நாட்டின்மேல் படையெடுத்து  வாகைமாலை  சூடிய வரலாற்றைப்
புனைந்துரைப்பது கலிங்கத்துப்பரணி.  பரணி பாடிய  செயங்கொண்டான்
என்னும்     கவிஞனைக்     குலோத்துங்க    சோழன்   பரிசளித்துப்
பாராட்டினான். அம்மன்னன் தமிழிசை