பக்கம் எண் :

72தமிழ் இன்பம்

II. காவிய இன்பம்

11, காதலும் கற்பும்*

காதல்     என்பது காதுக் கினிய சொல்; கருத்துக் கினிய  பொருள்.
காதல்  உண்டாயின் இவ்வுலகில் எல்லாம் உண்டு;  காதல் இல்லையேல்
ஒன்றும்  இல்லை.  “காதல்,  காதல், காதல் -  இன்றேல் சாதல், சாதல்,
சாதல்”   என்று   பாடினார்   பாரதியார்.   ஆயினும்,  அச்சொல்லை
எல்லோரும்  கூசாமல் பேசுவதில்லை. சின்னஞ்   சிறியவர் காதில் அது
விழலாகாதாம்.  கன்னியர்  வாயில்  அது    வரலாகாதாம். இப்படி ஏன்
அச்சொல்   ஒதுக்கப்படுகின்றது?   தமிழ்க்     கவிகள்  காதல்  என்ற
சொல்லை   எடுத்தாளவில்லையா?  திருப்பாடல்களில்    அஃது  இடம்
பெறவில்லையா?        காவியங்களிலும்,      நீதி       நூல்களிலும்
திருப்பாசுரங்களிலும்  பயின்ற  அழகிய தமிழ்ச்   சொல்லை ஏன் கூசிக்
கூசிப்    பேச    வேண்டும்?   தேவாரத்தில்    அடியாரது    காதல்
பேசப்படுகின்றது.


 

சென்னை  வானொலி  நிலையத்திலே  பேசியது;  நிலையத்தார்
இசைவு பெற்றுச் சேர்க்கப்பட்டது.