“காதலாலே கருதும் தொண்டர் காரணத்தர் ஆகி” நின்ற சிவபெருமானைச் சுந்தரர் பாடுகின்றார். இன்னொரு பெரியார் - திருஞானசம்பந்தர் - இறைவன் திருநாமத்தை ஓதும் காதலடியார் பெருமையைக் கூறுகின்றார். “காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சி வாயவே” என்பது அவர் திருப்பாட்டு. இவ்வாறு தேவாரம் முதலிய தெய்வப் பாடல்களில் பயின்ற காதல் என்ற சொல்லைக் கடி சொல்லாகக் கருதலாமோ? காதல் என்ற சொல்லின் பொருள்தான் என்ன? அன்பு என்றாலும் காதல் என்றாலும் பொருள் ஒன்றே. பெற்றோர்க்குப் பிள்ளையிடம் உள்ள அன்பு மேல் காதல்தான். ‘கடந்த பேர்களும் கடப்பரோ மக்கள் மேல் காதல்’ என்று கவிஞர் பாடவில்லையா? பெற்ற பிள்ளையைக் காதலன் என்று கூறுவதுண்டு. வாலியின் மைந்தனாகிய அங்கதனை ‘வாலி காதலன்’ என்று குறிக்கின்றார் கம்பர். இவ்வாறே நண்பனையும் காதலன் என்று கவியரசர் கூறுவர். கங்கைக் கரையிலே இராமனுடைய நண்பனாயினான் குகன்; அவன் அன்பிற்குக் கங்கை கரையில்லை. அது கண்ட இராமன், “சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக் காதல னாகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான்” |