பக்கம் எண் :

74தமிழ் இன்பம்

எனவே   பக்தியும்  காதல்;   பிள்ளைப்   பாசமும்  காதல்;  நேசமும்
காதல்; சுருங்கச் சொல்லின் தலைசிறந்த அன்பே காதல்.

இவ்வளவு     விரிந்த   பொருளில் வழங்கிய காதல் என்ற சொல்,
இப்பொழுது   ஆண்  பெண்   என்னும்  இரு  பாலாரிடையே  உள்ள
அன்பையே   பெரும்பாலும்  குறிக்கின்றது.  காதலன் என்றால் கணவன்;
காதலி    என்றால்   மனைவி.    இவ்விருவரையும்  இல்வாழ்க்கையில்
இழுப்பது    காதல்,   பின்பு    இல்வாழ்க்கையை    நல்வாழ்க்கையாக
நடைபெறச்     செய்வதும்     காதல்.   கண்ணிரண்டும்   ஒன்றையே
காண்பதுபோல   இல்வாழ்க்கையில்    ஈடுபட்ட    இருவரையும்   ஒரு
நெறிப்படுத்துவது  காதல்.  “காதல்  மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஒரு கருமம் செய்பவே” என்றார் ஒரு கவிஞர்.

ஆதியில்,     காதல் மணமே தமிழ் நாட்டில்   சிறந்து விளங்கிற்று.
‘காதல்  இல்லாத  வாழ்க்கை  உயிரில்லாத   உடல் போன்றது’ என்பது
தமிழர்  கொள்கை.  காதலுற்ற  கன்னியர்,   தம்  கருத்து  நிறைவேறும்
வண்ணம்  காமனை   வேண்டிக்கொள்ளும்   வழக்கமும்  முற்காலத்தில்
இருந்ததாகத்  தெரிகின்றது.   காதல்   விளைக்கும் தேவனைக் ‘காமன்’
என்றும்,  ‘காமவேள்’  என்றும்   தமிழர்   அழைத்தனர். தாம் கருதிய
காதலனைக்  கணவனாகப் பெறுவதற்கும்,  பிரிந்த  கணவனை மீண்டும்
அடைவதற்கும்,   காமன்  கோயிலிற்   சென்று   மங்கையர்  வழிபடும்
வழக்கம்   அந்   நாளில்  இருந்தது.   கோவலன்,   மாதவி  என்னும்
நடிகையின்  மையலிலே  முழ்கித்  தன்  மனைவியாகிய  கண்ணகியைப்
பிரிந்திருந்தபோது, ‘காமவேள் கோயிலிற்  சென்று  தொழுதால் கணவன்
மீண்டும்   வந்து   சேர்வான்’  என்று   அக்   கற்பரசியிடம்  அவள்
உயிர்த்தோழி எடுத்துரைத்தாள்.