பக்கம் எண் :

76தமிழ் இன்பம்

ஆயினும்,     கால கதியில் காமம் என்பது துன்மார்க்கத்திற் பெறும்
இன்பத்தைக்   குறிப்பதாயிற்று.   காமி,   காமுகன்  முதலிய  சொற்கள்
தூர்த்தன்   என்ற   பொருளிலே   வழங்குகின்றன.  காமுகன்,  கல்வி
கற்பதற்கும் தகுதியற்றவன் என்று நன்னூல் கூறுகின்றது.

இனி,     காதலுக்கும்   கற்புக்கும்   உள்ள   தொடர்பைச்  சிறிது
பார்ப்போம்;  காதல்  என்பது   உணர்ச்சி;   கற்பு  என்பது  ஒழுக்கம்.
உணர்ச்சியால்   ஒன்றுபட்ட    நம்பியும்    நங்கையும்   (தலைமகனும்
தலைமகளும்)  ஒருவரை   யொருவர்  தமக்கே  உரியவராகக் கொண்ட
நிலையிலே தோன்றும் ஒழுக்கமே கற்பு என்பர்.

சீதையின்     காதலில் வைத்து இந்த  உண்மையைக் காட்டுகின்றார்
கம்பர்.  மிதிலை  மாநகரத்தில் கன்னி  மாடத்தின்  மேடையிலே நின்ற
சீதையும்   விதியின்   வழியாகச்    சென்ற   இராமனும்  தற்செயலாக
ஒருவரை  யொருவர்  நோக்கினர்.   இருவர்  கண்ணோக்கும்  ஒத்தது;
காதல் பிறந்தது. காதலர் இருவரும்  ஒருவர்  இதயத்தில் ஒருவர் புகுந்து
உறவாடினர்.

இந்த     நிலையில்   இராமன்   தன்னுடன்   வந்த  தம்பியோடும்
முனிவரோடும்   வீதியிற்   சென்று    மறைந்துவிடுகின்றான்.   அவன்
இன்னான்   என்று   அறியாள்  சீதை.   அவன்   எங்கே  சென்றான்
என்பதும்  உணராள்;  ஆயினும்,   அவனையே  கருத்தில் அமைத்துக்
கரைந்து உருகுகின்றாள். அந்த  வேளையில்  ஓடி  வருகின்றாள் அவள்
தோழியாகிய  நீலமாலை;  ஆனந்தமுற்று  ஆடுகின்றாள்;  பாடுகின்றாள்.
“தோழீ!  என்ன  செய்தி?”  என்று   கேட்கின்றாள்   சீதை. அப்போது
தோழி சொல்கின்றாள்: “அயோத்தி