பக்கம் எண் :

காவிய இன்பம்79

என்று     கூறுகின்றது    சிலப்பதிகாரம்.   அடக்கமும்  பொறுமையும்,
கற்பும்  கண்ணீரும்  கண்ணகியின் வடிவம்.   “கண்டார் வெறுப்பனவே
காதலன்தான்   செய்திடினும்   கொண்டானை     யல்லால்   அறியாக்
குலமகள்”  என்று  ஆழ்வார்  பாடிய    திருப்பாட்டுக்கு  ஓர் எடுத்துக்
காட்டாக அமைந்தாள் கண்ணகி.

இத்தகைய    மென்மையும் பொறுமையும் வாய்ந்த கண்ணகி, மதுரை
மாநகரில்   தன்  கணவனை    இழந்த  போது  வன்மையின்  வடிவம்
கொண்டாள்;   கற்பெனும்     திண்மை   அவ்வடிவத்திலே   களிநடம்
புரிந்தது.  அத்திண்மையைக் கண்டு    திடுக்கிட்டான் அரசன்; அப்பால்
அவள்    பேசிய   திடமொழியைக்   கேட்டபோது    மயங்கிவிழுந்து
மாண்டான்.  தவறு  செய்த அரசனைக் கற்பின்   திண்மையால் ஒறுத்த
கண்ணகி, வீரபத்தினியாகத் தமிழ் நாட்டிலே   போற்றப்பட்டாள். அன்று
முதல்  இன்றளவும் கண்ணகி, மாதர்குல மணி   விளக்காய், வீரக்கற்பின்
விழுமிய கொழுந்தாய் விளங்குகின்றாள்.